Published : 21 Nov 2020 09:09 AM
Last Updated : 21 Nov 2020 09:09 AM
காங்கிரஸ் கட்சியின் தலைமையின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்து சமீபத்தில் கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் 4 தலைவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கி தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட மூன்று குழுக்களில் இந்த 4 தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை தேவை, ஆக்கப்பூர்வமாக, உற்சாகமாகச் செயல்படக்கூடிய தலைமையும், மாற்றங்களும் தேவை என்று கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அமைப்பிலும், நிர்வாகத்திலும் பல்வேறு மாற்றங்களைச் செய்து புதிய நிர்வாகிகளை அமர்த்தினார், எதிர்்ப்புத் தெரிவித்த 23 தலைவர்களின் முக்கியத்துவமும் குறைக்கப்பட்டது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மோசமாகச் செயல்பட்டதை கபில் சிபல், தாரிக் அன்வர் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் விமர்சித்தனர். சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு, பொருளாதார விவகாரம், வெளிநாட்டு விவகாரம் ஆகிய 3 குழுக்களிலும் எதிர்ப்புக் குழுவில் இருந்த 4 தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால் கபில் சிபல் மட்டும் இடம் பெறவில்லை.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய பாதுகாப்புக் குழு, பொருளாதார விவகாரம், வெளிநாட்டு விவகாரம் ஆகிய 3 குழுக்களிலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இடம் பெற்றுள்ளார்.
பொருளாதார விவகாரக் குழுவில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஒருங்கிணைப்பாளராக மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செயல்படுவார்.
வெளிநாட்டு விவகாரக் குழுவில் உறுப்பினர்களாக மன்மோகன் சிங், மூத்தத் தலைவர் ஆனந்த் சர்மா, சசி தரூர், சல்மான் குர்ஷித், சப்தகிரி உல்கா ஆகியோரும், இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக சல்மான் குர்ஷித் செயல்படுவார்.
தேசியப் பாதுகாப்புக்கான குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத், வீரப்ப மொய்லி, வின்சென்ட் ஹெச் பாலா, வி. வைத்திலிங்கம் ஆகியோர் உறுப்பினர்களாகவும், இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக வின்சென்ட் ஹெச் பாலா செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டை விமர்சித்திருந்த மூத்த தலைவர் கபில் சிபல் “ காங்கிரஸ் கட்சியை மாற்று சக்தியாக மக்கள் பார்க்கவில்லை. இந்த தோல்வியை காங்கிரஸ் தலைமை வழக்கமானது என்று எடுத்துக்கொள்கிறது” எனத் தெரிவித்தார்.
இந்தக் கருத்தை கார்த்தி சிதம்பரம் மட்டும் ஆதரித்தார். ஆனால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குர்ஷித், கார்கே போன்ற மூத்த தலைவர்கள் கட்சித் தலைமைக்கு ஆதரவாககருத்துக்களை வெளியிட்டனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT