Published : 20 Nov 2020 03:51 PM
Last Updated : 20 Nov 2020 03:51 PM

கோவிட்-19 சவால்; நாடுமுழுவதும் 50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள்: ஹர்ஷ் வர்தன் பாராட்டு

புதுடெல்லி

நாடு முழுவதும் தற்போது 50,000க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த சாதனைக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு, தங்கள் வீட்டுக்கு அருகிலேயே ஆரம்ப சுகாதார சேவைகள் கிடைப்பதற்காக, ஆயஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 2022 டிசம்பருக்குள் 1.5 லட்சம் சுகாதார நல மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 50,025 சுகாதார நல மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம் மூன்றில் ஒரு பங்கு இலக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 25 கோடிக்கும் மேற்பட்டோர், ஆரம்ப சுகாதார வசதிகளை குறைந்த செலவில் பெற வழிவகுத்துள்ளது.

கோவிட்-19 சவால்களுக்கு இடையே இந்த சாதனையை படைத்ததற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார். கரோனா நெருக்கடி காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு, ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கிய மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுகாதார நல மையங்கள் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் ஆகியவை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் இரு தூண்களாக செயல்படுகின்றன. இந்த இரு திட்டங்களுக்கு இடையேயான இணைப்பின் மூலம் முழு அளவிலான மருத்துவ சேவைகள் கிடைக்கிறது.

ஆயுஷ்மான் பாரத் - சுகாதார நல மைய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த சுகாதார நல மையங்கள், மக்களுக்கு ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குகின்றன. மகப்பேறு, குழந்தைகள் நலன், ஊட்டச்சத்து, தொற்று நோய் கட்டுப்பாடு ஆகிய சேவைகள் இத்திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

நாடு முழுவதும் 678 மாவட்டங்களில் தற்போது 50,025 சுகாதார நல மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் 27,890 துணை சுகாதார மையங்கள், 18,536 ஆரம்ப சுகாதார மையங்கள், 3,599 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களாகும். இங்கு மொத்தம் 28.10 கோடிப் பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர். இவர்களில் 53 சதவீதம் பேர் பெண்கள். 6.43 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பரிசோதனையும், 5.23 கோடிப் பேருக்கு நீரிழிவு பரிசோதனையும், 6.14 கோடிப் பேருக்கு புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்பட்டள்ளது. ஒரு கோடிப் பேர் உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்காகவும், 60 லட்சம் பேர் நீரிழிவு நோய்க்கும் இலவசமாக மருந்து பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x