Published : 20 Nov 2020 12:38 PM
Last Updated : 20 Nov 2020 12:38 PM
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிப்பது அநியாயமானது என டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி கூறியதாவது:
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிப்பது அநியாயமானது. இதனால் லஞ்சம் மட்டுமே பெருகும். விதிமுறைகளை மீறுவோர் அபராதத்திலிருந்து இருந்து தப்பிக்க பேரம் பேசி லஞ்சம் வழங்கமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம். மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து தவிக்கும் சூழலில் ரூ.2000 அபராதம் எப்படி சாத்தியமாகும். மாறாக அரசு அனைவருக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.100 அபராதம் விதிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 7546 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 98 பேர் கரோனாவுக்கு பலியாகியிருக்கின்றனர். அன்றாடம் , சராசரியாக 7000 பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.
அசைந்து கொடுக்காது ஆம் ஆத்மி:
காங்கிரஸ் கட்சியின் கண்டனக் குரல் ஒருபுறம் ஒலிக்க அதற்கு சற்றும் அசைந்து கொடுப்பதாக இல்லை ஆம் ஆத்மி அரசு.
முகக்கவசம் தொடர்பாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இன்று கூறுகையில், "முகக்கவசம் அணியாதோருக்கு ரூ.2000 அபராதம் விதிப்பது தொடர்பான உத்தரவு நகல் இன்று மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுவிடும். வீட்டிலிருந்து வெளியில் இறங்கும்போதே முகக்கவசத்துடன் வருவதை மக்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். காரில் பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிவது நல்லது.
இன்று முதல், கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிகுறி உடையவர்கள் கண்டறியும் நடவடிக்கை தொடங்கியிருக்கிறது" என்றார்.
இதற்கிடையில் கரோனா பரவலின் கூடாரமாக டெல்லியின் சந்தைகள் இருப்பதால், சந்தை கூட்டமைப்புகளிடம் ஆலோசனை நடத்தவிருப்பதாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT