Last Updated : 20 Nov, 2020 11:16 AM

 

Published : 20 Nov 2020 11:16 AM
Last Updated : 20 Nov 2020 11:16 AM

ஜம்முவில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: வைஷ்ணவி தேவி ஆலயம் அருகே கடுமையான பாதுகாப்பு

ஜம்முவில் வைஷ்ணவி தேவி ஆலயம் அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது | படம்: ஏஎன்ஐ.

4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து வைஷ்ணவி தேவி ஆலயம் அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஜம்முவைச் சேர்ந்த நக்ரோட்டாவில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நவம்பர் 28 முதல் டிசம்பர் 19 வரை எட்டுக் கட்டங்களாக ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜம்மு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் முகேஷ் சிங் கூறியதாவது:

''நக்ரோட்டாவில் உள்ள பான் டோல் பிளாசா அருகே வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஒரு லாரி தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து இந்த மோதல் ஏற்பட்டது.

தேடலின் போது, சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் போலீஸார் கனரக வெடிமருந்துகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் கையெறி குண்டுகளும் வீசப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை மூன்று மணி நேரம் நீடித்தது.

இதில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நான்கு பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் ஆதரவுடைய ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையவர்கள்.

பயங்கரவாதிகள் ஒரு பெரிய தாக்குதலுக்கு முயன்றனர். யூனியன் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தல்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டிருக்கலாம். இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வைஷ்ணவி தேவி ஆலயம் அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு ஜம்மு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x