Published : 20 Nov 2020 11:14 AM
Last Updated : 20 Nov 2020 11:14 AM
”அமெரிக்காவுக்கு 2020-ல் தான் ஒரு பெண் துணை அதிபர் கிடைத்துள்ளார். ஆனால், இந்திரா காந்தி 50 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவின் முதல் பெண் பிரதமராகிவிட்டார்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார் பிரியங்கா காந்தி.
நாடு முழுவதும் நேற்று (நவ.19) இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த ட்வீட் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.
பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்கா 2020-ல் தான் தனது முதல் பெண் துணை அதிபரைத் தேர்வு செய்திருக்கிறது.
ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியாவின் முதல் பெண் பிரதமராகத் தேர்வாகிவிட்டார் இந்திரா காந்தி. அவருடைய துணிவும் வலிமையும் இன்றளவும் உலகளவில் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது" என்றுப் பதிவிட்டுள்ளார்.
நவம்பர் 19, 1917-ல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தார் இந்திரா காந்தி.
1966-ல் இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார். 1966 முதல் 1977 வரை இந்தியப் பிரதமராக இருந்தார். அதன் பின்னர், 1980 முதல் அவர் படுகொலை செய்யப்பட்ட 1984 வரை பிரதமராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT