Published : 20 Nov 2020 06:56 AM
Last Updated : 20 Nov 2020 06:56 AM
பிரதமர் மோடி, நேற்று முன்தினம் இரவு ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவை ஸ்திரமாக வைத்திருப்பதில் இருவரும் பரஸ்பரம் உறுதி தெரிவித்துக் கொண்டோம். கரோனா வைரஸ் சவால்கள், பருவநிலை மாற்றம், இந்திய - பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தோம். அமெரிக்காவிலும் உலக நாடுகளிலும் ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்ய வேண்டும் என்று பைடன் வலியுறுத்தினார்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
துணை அதிபராகத் தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கும் பிரதமர் மோடி தனியாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்
கிறார். அதில், "துணை அதிபராகத் தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸின் வெற்றி இந்திய அமெரிக்கச் சமூகத்தினருக்கு பெருமிதம் தரும் நிகழ்வாக அமைந்துள்ளது" என்று மோடி கூறியுள்ளார்.
ஜோ பைடன் அமெரிக்க துணை அதிபராக இருந்த போது கடந்த 2014, 2016-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தந்தது குறித்தும் பிரதமர் மோடி தனது உரையாடலில் நினைவுகூர்ந்ததாக வெளியுறவுத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடிக்கு ஜோ பைடனின் அதிகாரிகள் குழு நன்றி தெரிவித்துள்ளது.
இந்தியா - அமெரிக்க நட்புறவை வலுப்படுத்துவதில் பைடன் ஆர்வமுடன் இருக்கிறார். கரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ளுதல், எதிர்காலத்தில் இதுபோன்ற சுகாதாரச் சவால்கள் ஏற்பட்டால் தற்காத்துக் கொள்ளுதல், பருவநிலை மாற்றப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், சர்வதேசப் பொருளாதாரச் சுணக்கத்தில் இருந்து மீண்டெழுதல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், அமெரிக்காவிலும் உலக நாடுகளிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல், இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பையும் வளமையையும் உறுதிப்படுத்துதல் போன்ற விஷயங்களில் இந்தியாவுடன் பைடன் இணைந்து செயல்பட ஆர்வத்துடன் இருக்கிறார் என்று அவரது குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT