Published : 20 Nov 2020 06:53 AM
Last Updated : 20 Nov 2020 06:53 AM

இந்தியாவில் சிறந்த வல்லுநர்கள் உள்ளதால் உலகுக்கு தொழில்நுட்ப தீர்வை தரும் நேரமிது: பெங்களூருவில் தொடங்கிய ஐ.டி. மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

தகவல் தொழில்நுட்ப மாநாடு, பெங்களூருவில் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கியது. இதில் பிரதமர் மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயண், அமைச்சர் ஜகதீஷ் ஷெட்டர், பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத் உள்ளிட்டோர் பிரதமரின் உரையை கவனிக்கின்றனர். படம்: பிடிஐ

பெங்களூரு

‘‘இந்தியாவில் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள், உலகுக்கு பயன்படும் வகையில் உருவாக்கித் தரும் நேரம் இது’’ என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார்.

தகவல் தொழில்நுட்ப மாநாடு பெங்களூருவில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

தகவல் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்த வல்லுநர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இதன் காரணமாகவே இத்துறையில் இந்தியா மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. சிறந்த வல்லுநர்கள் இருப்பதால், சிறந்த சந்தை வாய்ப்புகள் இத்துறையில் உருவாகி உள்ளன. தொழில்நுட்ப வல்லுநர்கள் இத்துறைக்கு தேவைப்படும் தீர்வுகளைக் கண்டறியும் போது அது உலகுக்கே பயன்படும் வகையில் அமையும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. சமீபத்தில் கூட இத்துறையினருக்கு நெருக்குதலாக அமைந்த பல்வேறு பிரச்சினைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏழைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகதான், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் நிகழும். அதற்காகதான் தொழில்
நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும் தொழில்நுட்பங்கள் மனித நேயம் கொண்டவையாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயம் மேம்படும். இதன் ஒருபகுதியாகதான் அரசின் அனைத்து செயல் திட்டங்களும் தொழில்நுட்
பத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசின் பிரதான செயல் திட்டத்தில் தொழில்நுட்பத்துக்குதான் முன்னுரிமை தரப்படுகிறது.

தொழில்நுட்பம் வாயிலாக மனிதர்கள் மதிப்புடன் வாழ வழியேற்படுகிறது. பல லட்சக்கணக்கான விவசாயிகள் ஒரே கிளிக் மூலம் பல்வேறு மானிய சலுகைகளைப் பெற முடிகிறது. கரோனா வைரஸ் பரவல் காலத்தில் முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தை நம்பியே இருக்கும் சூழல் நிலவுகிறது. ஏழை மக்களுக்கு ஊரடங்கு காலத்திலும் உதவி கிடைக்க வழியேற்படுத்தியது இந்த தொழில்
நுட்பம்தான். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கர்நாடக அரசுடன் இணைந்து கர்நாடக தொழில்நுட்ப சங்கம் இந்த தொழில்நுட்ப மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள் உள்ளிட்டவை இம்மாநாட்டில் பங்கேற்கின்றன. இம்மாநாடு 21-ம் தேதி வரை நடைபெறும். 25 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் மாநாட்டில் பங்கேற்கின்றன. 200 இந்திய நிறுவனங்கள் காணொலி அரங்குகளை அமைத்துள்ளன. 4 ஆயிரம் தொழில்நுட்ப பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 75 கட்டுரை தலைப்புகள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x