Published : 19 Nov 2020 07:12 PM
Last Updated : 19 Nov 2020 07:12 PM
பிஹாரில் மெகா கூட்டணி தோல்வியுறக் காரணமான அசாசுத்தீன் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி அடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிடுகிறது. இதைச் சமாளிக்க காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும் அம்மாநில முஸ்லிம் தலைவர்களை அணுகியுள்ளன.
ஹைதராபாத்தின் எம்.பி.யான அசாசுத்தீன் ஒவைஸியின் அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லிம் கட்சியால் (ஏஐஎம்ஐஎம்) எதிர்க்கட்சிகளுக்கு சிக்கலாகிவிட்டது. ஆந்திரா, தெலங்கானாவிற்கு வெளியேயும் போட்டியிடத் தொடங்கிய கட்சியால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரியும் நிலை உருவாகி உள்ளது.
இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அமைந்தது. இங்கு ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம், 12 தொகுதிகளில் லாலு தலைமையிலான மெகா கூட்டணிக் கட்சிகளைத் தோல்வியுறச் செய்தது.
இதனால், வெறும் 16 தொகுதிகள் வித்தியாசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் மேற்கு வங்க மாநிலத்திலும் ஒவைஸி போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இதன் பாதிப்புகளைத் தடுக்க காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும் உடனடியாகக் களம் இறங்கிவிட்டன. நேற்று முடிந்த தேசிய சிறுபாமையினர் தினத்தில் அம்மாநிலத்தின் முக்கிய முஸ்லிம்களுடன் இக்கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதில், மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதிரி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரான அப்துல் மன்னான் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியானது பாஜகவின் ஒரு பிரிவாகவே செயல்படுவதாகவும் எடுத்துக் கூறி எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, ”இம்மாநிலத்தின் முக்கிய முஸ்லிம் தலைவரான தோஹா சித்திக்கீயைச் சந்தித்து அவர் மூலமாக அவரது சமூகத்திற்கு ஒரு செய்தியை அளித்துள்ளோம்.
அதில், பாஜகவின் மற்றொரு பிரிவான ஏஐஎம்ஐஎம் கட்சியால் ஏமாந்துவிட வேண்டாம் என எடுத்துக் கூறியுள்ளோம். இதன்மூலம், சிறுபான்மை வாக்குகள் சிதறி விடக்கூடாது” எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 295 தொகுதிகளில் சுமார் 98 தொகுதிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். இதில், 76 தொகுதிகளில் போட்டியிட்டு 35 தொகுதிகளைக் கைப்பற்ற ஒவைஸி திட்டமிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த எண்ணிக்கையிலான தொகுதிகளால் பிஹாரைப் போல் மேற்கு வங்கத்திலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் நிலவுகிறது. இந்த 35 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர்.
அடுத்த வருடம் இங்கு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய வியூகம் அமைத்துள்ள பாஜக, அவற்றை ஐந்து பகுதிகளாகப் பிரித்துள்ளது. இதன் பொறுப்பாளர்களாக தனது தேசியத் தலைவர்களை நியமித்த அமித் ஷா, அவர்களுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT