Published : 19 Nov 2020 03:09 PM
Last Updated : 19 Nov 2020 03:09 PM
தேசிய கீதம் பாடத் தெரியாதவரைக் கல்வி அமைச்சராக்குவாதா? என, பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை தேஜஸ்வி யாதவ் கடுமையாகச் சாடியுள்ளார். இதைக் குறிப்பிட்டு தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்த பழைய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிஹாரில் தேசிய ஜனநாயக முன்னணியின் (என்டிஏ) முதல்வரான நிதிஷ் குமார், தனது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நேற்று (நவ.18) இலாகா ஒதுக்கீடு செய்தார். இதில் கல்வி அமைச்சராக அமர்த்தப்பட்ட மேவாலால் சவுத்ரி மீது சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதன் மீது பிஹாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி பிரசாத் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், தேசிய கீதத்தை ஒரு பள்ளி விழாவில் தவறாகப் பாடிய கல்வி அமைச்சர் மேவாலாலின் வீடியோவையும் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதுகுறித்து தேஜஸ்வி குறிப்பிடும்போது, "மேவாலால் சவுத்ரி மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவருக்கு தேசிய கீதம் கூடப் பாடத் தெரியவில்லை. இதுபோன்றவரைக் கல்வி அமைச்சராக அமர்த்துவது அவமானம் இல்லையா நிதிஷ்ஜி?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பிஹாரின் ஒரு சிறிய பள்ளி விழாவில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மேவாலால் சவுத்ரி தேசிய கீதத்தை அரைகுறையாகவும், தவறாகவும் பாடுவது பதிவாகியுள்ளது.
முன்னதாக இதுகுறித்து தேஜஸ்வி விடுத்த அறிக்கையில் கூறும்போது, "பிஹாரின் விவசாயப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது பல ஊழல்கள் புரிந்ததாக மேவாலால் மீது ஐபிசி 420 பிரிவில் வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதில், ஜாமீன் பெற்றுள்ளவரை நிதிஷ் தன் கட்சியிலிருந்தும் 2017இல் இடைநீக்கம் செய்திருந்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவும் மேவாலால் விவகாரத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இப்போது, முதல்வர் நிதிஷ் குமார் கல்வித்துறையிலும் ஊழல் புரிய மேவாலாலுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கும் வகையில் அமைச்சராக்கி விட்டார். சிறுபான்மை சமூகத்தில் இருந்து ஒருவர் கூட அமைச்சராக்கப்படவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
பிஹாரின் விவசாயப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்குப் பின் 2015இல் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் மேவாலால் இணைந்திருந்தார். தாராபூர் தொகுதியில் 2015 தேர்தலுக்குப் பின் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT