Last Updated : 19 Nov, 2020 02:49 PM

 

Published : 19 Nov 2020 02:49 PM
Last Updated : 19 Nov 2020 02:49 PM

தேர்தலின்போது மட்டுமே சிலர் மேற்கு வங்கம் வருகிறார்கள்: பாஜகவைக் குறிவைத்து மம்தா பானர்ஜி பேச்சு

மம்தா பானர்ஜி | கோப்புப் படம்.

கொல்கத்தா

தேர்தலின்போது மட்டுமே சிலர் மேற்கு வங்கத்திற்கு வருகிறார்கள் என்று அம்மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசினார்.

மேற்கு வங்கத்தில் 2021ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜியின் 10 ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை பாஜக தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்காகக் கட்சி அமைப்புப் பணிகளில் ஈடுபட, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் அம்மாநிலத்திற்கு மாதந்தோறும் வருகை தர உள்ளதாக பாஜக தெரிவித்தது.

இந்நிலையில், தேர்தலின்போது மட்டுமே சிலர் மேற்கு வங்கத்திற்கு வருகிறார்கள் என்று மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

கொல்கத்தாவில் அதிக அளவில் இந்தி மொழி பேசும் மக்கள் வசிக்கும் போஸ்டா பஜாரில் இன்று நடைபெற்ற ஜகதத்ரி பூஜையின் தொடக்க விழாவில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மேற்கு வங்கத்தில் வரவேற்கப்படுவதில்லை. நாம் அவ்வாறு செய்வதாக சில கட்சிகள் கூறிவருகின்றன.

ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, அமைதிக்கு இடையூறு விளைவிப்பதற்காக மற்ற மாநிலங்களிலிருந்து ஒருசிலர் குண்டர்களை அழைத்து வருகிறார்கள்.

மாநிலத்தில் அமைதியின்மையை உருவாக்க முயலும் குண்டர்கள் மற்றும் வெளியாட்களை நாம் அனைவரும் சேர்ந்து எதிர்த்து நிற்கவேண்டும். வெளியில் இருந்து சில குண்டர்கள் நம் மாநிலத்திற்கு வந்து உங்களை அச்சுறுத்தினால், நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களை எதிர்க்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

நாங்கள் அமைதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனால், மற்றவர்களை அச்சுறுத்துவதற்காகத் தேர்தலின்போது மட்டுமே சிலர் மாநிலத்திற்கு வருகிறார்கள். நாம் அவர்களை இங்கே சுதந்திரமாக இயங்க அனுமதிக்கக் கூடாது. பிளவுபடுத்தும் சக்திகளான இந்த வெளியாட்களை நாம் தோற்கடிக்க வேண்டும்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இது மம்தாவின் விரக்தியான பேச்சு: பாஜக பதிலடி

இந்த அறிக்கைக்கு பாஜக தேசிய பொதுச் செயலாளரும், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவருமான கைலாஷ் விஜய வர்கியா பதிலடி தந்துள்ளார்.

இதுகுறித்து விஜய வர்கியா கூறுகையில், ''மம்தா பானர்ஜியின் கருத்துகள் மாநிலத்தில் பாஜக வளர்ச்சி மேம்பட்டு வருவது குறித்த திரிணமூல் காங்கிரஸின் விரக்தியைப் பிரதிபலிக்கிறது. இத்தகைய கருத்துகள் டி.எம்.சி மற்றும் அதன் தலைமையின் கோபத்தையும் விரக்தியையும் பிரதிபலிக்கின்றன.

நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தில் வரவேற்கப்படுவதில்லை என்று மம்தா கூறுவது நகைப்புக்குரியது. ஆனால், வங்கதேசத்திலிருந்து ஊடுருவும் நபர்கள் டி.எம்.சியின் வாக்கு வங்கியை உருவாக்குவதால் திறந்த ஆயுதங்களுடன் வரவேற்கப்படுகிறார்கள்” என்றார்.

2019 பொதுத் தேர்தலில் மாநிலத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் 18 இடங்களை பாஜக வென்றது. இதன் மூலம், ஆளும் திரிணமூல் காங்கிரஸின் முக்கியப் போட்டியாளராக பாஜக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x