Published : 19 Nov 2020 10:40 AM
Last Updated : 19 Nov 2020 10:40 AM
ஜம்மு காஷ்மீரின் நக்ரோட்டா மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நக்ரோட்டா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பான் சுங்கச்சாவடி பகுதியில் போலீஸாரும், சிஆர்பிஎஃப், ராணுவ வீரர்கள் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு காரில் வந்த தீவிரவாதிகளை போலீஸார் விசாரிக்க முயன்றபோது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் காரில் இருந்த 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஜம்மு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் பாட்டீல் கூறுகையில், “ சம்பா செக்டார் பகுதியிலிருந்து நக்ரோட்டா நோக்கி தீவிரவாதிகள் செல்வதாக ரகசியத் தகவல் கிடைத்துத. இதையடுத்து, இன்று அதிகாலை 5 மணி அளவில் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பான் சோதனைச் சாவடி பகுதியில் லாரியில் வந்த 4 பேரை போலீஸார் விசாரிக்க முயன்றபோது திடீெரன துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்குப் பாதுகாப்புப் படையினர், சிஆர்பிஎஃப், போலீஸார் திருப்பிச் சுட்டு பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடம் இருந்து ஏ.கே. 47 ரகத்தைச் சேர்ந்த 11 தானியங்கி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சண்டையில் காவலர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
இந்தத் தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு ஸ்ரீநகர் சுங்கச்சாவடி தற்போது மூடப்பட்டு போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT