Published : 18 Nov 2020 05:31 PM
Last Updated : 18 Nov 2020 05:31 PM

ஒன்றிணைத்தல், பன்முகத்தன்மை; ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் பிரதிபலிக்கிறது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்

புதுடெல்லி

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் வரும் மாணவர்கள், சிறந்து விளங்குவதற்கான சம வாய்ப்பை அளிக்கும் சூழ்நிலையைக் கொண்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று கூறினார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் நான்காவது பட்டமளிப்பு விழாவில், காணொலி மூலம் உரையாற்றிய குடியரசுத் தலைவர், ஒன்றிணைத்தல், பன்முகத்தன்மை, சிறந்து விளங்குதல் ஆகியவற்றை இந்த பல்கலைக்கழகம் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

இந்தியக் கலாச்சாரத்தின் அனைத்து தடங்களும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதிபலிப்பதாகவும், அதன் வளாகத்தில் உள்ள கட்டிடங்கள், தங்கும் விடுதிகள், சாலைகள், இதர வசதிகளுக்கு இந்தியப் பாரம்பரியத்தில் இருந்து பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் கலாச்சார, புவியியல் சிறப்புகளை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த இந்தியத் தன்மைதான் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தனிச்சிறப்பாகும், அதை வலுப்படுத்துவது இந்தக் கல்வி நிறுவனத்தின் கடமையாகும் என்று கோவிந்த் கூறினார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள், விவாதங்களையும், மாற்றுக் கருத்துகளையும் ஊக்குவிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். கற்றலின் பங்குதாரர்களாக மாணவர்கள் நடத்தப்படுகிறார்கள், உயர்கல்வி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

வகுப்பறைகளுக்கு வெளியிலும், தேநீர் விடுதிகள், உணவகங்கள் ஆகிய இடங்களிலும் நடக்கும் துடிப்பான விவாதங்களுக்கு இந்த பல்கலைக்கழகம் புகழ் பெற்றது என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x