Last Updated : 18 Nov, 2020 02:39 PM

12  

Published : 18 Nov 2020 02:39 PM
Last Updated : 18 Nov 2020 02:39 PM

பிஹாரை அடுத்து மேற்கு வங்கம், உ.பி. மாநிலங்களிலும் ஒவைஸி கட்சி போட்டி: முஸ்லிம் வாக்குகள் பிரியும் நிலை

அசாசுத்தீன் ஒவைஸி- கோப்புப் படம்

புதுடெல்லி

பிஹாரை அடுத்து உத்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் அசாத்தீன் ஒவைஸியின் கட்சி போட்டியிடுகிறது. இதனால், அம்மாநிலங்களில் அதிகம் உள்ள முஸ்லிம் வாக்குகளும் பிரியும் நிலை உருவாகி உள்ளது.

ஹைதராபாத் எம்.பியான அசாசுத்தீன் ஒவைஸி, தனது அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லீமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவராக உள்ளார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் போட்டியிட்டு வந்தவர் கடந்த 2014 -ஆம் ஆண்டில் மற்ற மாநிலங்களிலும் கால் பதிக்கத் தொடங்கினார்.

மகராஷ்டிரா சட்டப்பேரவையின் 2014 தேர்தலில் 2 தொகுதிகள் கிடைத்ததால் அவருக்கு உற்சாகம் பிறந்தது. இதன் தாக்கமாக, பிஹாரின் 2015 தேர்தலில் 6 தொகுதியில் ஒவைஸி கட்சி போட்டியிட்டது.

இதில் எதுவும் கிடைக்காத ஒவைஸி கட்சிக்கு பிறகு பிஹாரின் கிஷண்கஞ்சில் வந்த இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்தது. பிறகு, உ.பி.யிலும் 2017 தேர்தலில் போட்டியிட்டவர் அங்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை.

மீண்டும் 2019 இல் மகராஷ்டிராவில் போட்டியிட்டு 2 தொகுதிகள் பெற்றது ஒவைஸி கட்சி. இதில், மனம் தளராத ஒவைஸி, பிஹாரில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவையில் போட்டியிட்டு 5 எம்எல்ஏக்களை பெற்றுள்ளார்.

இத்துடன் மேலும் 18 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகளை பிரித்ததால், லாலுவின் மெகா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பறி போனது. இனி, அடுத்த வருடம் வரும் மேற்கு வங்க மாநிலத்திலும், 2002 இல் உத்திரப்பிரதேசத்திலும் ஒவைஸி கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.

இதனால், அவ்விரண்டு மாநிலங்களிலும் அதிகமாக இருக்கும் முஸ்லிம் வாக்குகள் பிரியும் நிலை உருவாகி விட்டது. உ.பி.யில் 22, மேற்கு வங்க மாநிலத்தில் 27 சதவிகித எண்ணிக்கையிலான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.

ஒவைஸியின் வரவால் மேற்கு வங்கத்தில் ஆட்சி புரியும் திரிணமூல் காங்கிரஸுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. கடந்த வருட மக்களவை தேர்தலில் அங்குள்ள முஸ்லிம்களின் 70 சதவிகித வாக்குகளை திரிணமூல் பெற்றிருந்தது.

எனினும், இந்துக்களின் வாக்குகளில் 57 பாஜகவிற்கும், 32 சதவிகிதம் திரிணமூலுக்கும் கிடைத்தன. இதனால், அம்மாநிலத்தின் 42 மக்களவை தொகுதிகளில் பாஜக 18, திரிணமூல் 22 பெற்றன.

இந்நிலையில், அடுத்த வருடம் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் போட்டியிடுகிறது. இது, திரிணமூல் காங்கிரஸுக்கு பெரும் சவாலாகி விட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள சட்டப்பேரவை 295 தொகுதிகளில் சுமார் 98 இல் வெற்றி, தோல்வியை முஸ்லிம்கள் நிர்ணயிக்கின்றனர். இவற்றில் போட்டியிட்டு முஸ்லிம்கள் வாக்குகளை ஏஐஎம்ஐஎம் பிரித்தால் அது, திரிணமூலுக்கு சிக்கலை உருவாக்கும்.

உ.பி.யிலும் எதிர்கட்சிகளுக்கு சிக்கல்

இதனிடையே, உ.பி.யின் 2022 இல் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஏஐஎம்ஐஎம் கட்சியாலும் முஸ்லிம் வாக்குகள் பிரியும். இதன்மூலம், அங்கு ஆளும் பாஜகவை எதிர்த்து போட்டியிடும் எதிர்கட்சிகளின் வாக்குகள் பிரியும் என எதிர்பார்க்கப்படுகிறது,

’வோட் கட்வா (வாக்குகளை பிரிப்பவர்)’

இதன் காரணமாக, உ.பி.யின் முஸ்லிம் வாக்குகளை அதிகம் நம்பியிருக்கும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சிக்கல் உருவாகத் தொடங்கி உள்ளது. இதனால், இந்தி மொழி பேசும் மாநிலங்களில் ஒவைஸி கட்சிக்கு ‘வோட் கட்வா (வாக்குகளை பிரிப்பவர்)’ என அழைக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x