Published : 18 Nov 2020 12:03 PM
Last Updated : 18 Nov 2020 12:03 PM
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பாஜக மாநிலப் பொறுப்பாளர்களுடன் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் ஜே.பி.நட்டா இரு தினங்களில் நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்னோட்டமாகவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
கடந்த வாரம் ஜே.பி.நட்டா தேசிய அளவில் புதிய பொறுப்பாளர்களை நியமித்தார். அதன்படி, மேற்கு வங்கப் பொறுப்பாளராக கைலாஷ் விஜய் வர்கியா நியமிக்கப்பட்டார். அவருக்கு அர்விந்த மேனனும், பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித் மால்வியாவும் துணையாகச் செயல்படவுள்ளனர்.
டெல்லி, அசாம் மாநிலங்களுக்குக் கட்சியின் துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துஷ்யந்த் குமார் கவுதம் உத்தராகண்ட், பஞ்சாப், சண்டிகார் மாநிலங்களின் பொறுப்பாளராகவும், தருண் சக் ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்துடன் சேர்த்து பிஹாரையும் இனி பூபேந்திர யாதவ் கவனித்துக் கொள்வார். புரந்தரேஸ்வரி ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கும், அருண் சிங் ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்களாகச் செயல்படுவார்கள்.
தமிழகப் பொறுப்பாளராக இருந்த பி.முரளிதர் ராவ் மத்தியப் பிரதேச மாநிலப் பொறுப்பாளராகவும், சி.பி.ராதாகிருஷ்ணன் கேரள மாநில பாஜக பொறுப்பாளராகவும் செயல்படுவார்கள்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா, கோவா, தமிழகம் ஆகிய மாநிலங்களுக்குப் பொறுப்பாளராக பொதுச் செயலாளர் சி.டி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பாஜக மாநிலப் பொறுப்பாளர்களுடன் ஜே.பி.நட்டா நாளை ஆலோசனை நடத்துகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT