Last Updated : 18 Nov, 2020 09:03 AM

2  

Published : 18 Nov 2020 09:03 AM
Last Updated : 18 Nov 2020 09:03 AM

பிஹாரில் என்டிஏ கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியைக் கைப்பற்ற தேஜஸ்வீ திட்டம்  

புதுடெல்லி

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 15 தொகுதிகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஏ) ஆட்சி அமைந்துள்ளது. இதனால், அதன் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களைத் தன் பக்கம் இழுத்து, ஆட்சியைக் கைப்பற்ற தேஜஸ்வீ பிரசாத் யாதவ் முயல்வதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து போட்டியிட்டன. இதில், அதிக இடங்களாக ஆர்ஜேடிக்கு 75 தொகுதிகள் கிடைத்தன. காங்கிரஸுக்கு19 தொகுதிகளிலும், இடதுசாரிகளுக்கு 16 தொகுதிகளிலும் வெற்றி கிட்டியது.

எனினும், இவர்களின் மொத்த தொகுதிகள் என்டிஏவை விட 15 குறைவாக இருந்தமையால் மெகா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், என்டிஏ கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களைத் தன் பக்கம் இழுத்து ஆட்சியைக் கைப்பற்ற தேஜஸ்வீ முயல்வதாகக் கருதப்படுகிறது.

இதற்காக முக்கியப் பணியை பிஹாரின் குற்றச்செயல்கள் புரிந்த அரசியல்வாதியான அனந்த் சிங்கிடம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்துள்ளது. இவர் மொகாமா தொகுதியில் சிறையில் இருந்தபடி ஆறாவது முறையாக வெற்றி பெற்றவர்.

இவருக்கு உதவியாக இவரைப் போலவே குற்றச்செயல்கள் புரிவதில் பிஹாரின் பிரபலமான ரித்லால் யாதவ் அமர்த்தப்பட்டுள்ளார். பிஹார் மேலவையின் முன்னாள் சுயேச்சை உறுப்பினரான ரித்லால் மீது 33 கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன.

இவர்களுடன், ஆர்ஜேடியின் மாநிலங்களவை எம்.பி.க்களான மனோஜ் ஜா மற்றும் அம்ரேந்திரா தாரி சிங் ஆகியோரிடமும் என்டிஏவை உடைக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தனது இந்த ரகசிய திட்டத்தை ஆமோதிக்கும் வகையில் தேஜஸ்வீ, ‘முதல்வர் நிதிஷ் குமார் அரசு நீண்ட காலம் நிலைக்காது’ எனக் கூறி வருகிறார்.

என்டிஏவின் கூட்டணிக் கட்சிகளாக பாஜக, ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு), இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா செக்யுலர்(ஹெச்ஏஎம்) மற்றும் விகாஷீல் இன்ஸான் கட்சி (விஐபி) ஆகியவை உள்ளன. இவர்களில் பாஜக 74, ஜேடியு 43, ஹெச் ஏஎம் மற்றும் விஐபி கட்சிகளுக்கு தலா 4 தொகுதிகள் கிடைத்தன.

இவர்களில் ஹெச்ஏஎம் மற்றும் விஐபியும் மெகா கூட்டணியின் முன்னாள் உறுப்பினர்கள். எனவே, அவர்களை எளிதாக தன்னுடன் இழுக்க முடியும் என தேஜஸ்வீ திட்டமிடுகிறார்.

இதை உறுதி கூறும் வகையில், பதவி ஏற்பிற்கு மறுநாள் ஹெச்ஏஎம் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன்ராம் மாஞ்சி ஒரு தகவல் வெளியிட்டிருந்தார். அதில் அவர், தனக்கு ஆர்ஜேடி தலைவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாகப் புகார் கூறியிருந்தார்.

இவ்விரு கட்சிகளின் தலைவர்களுக்கும் துணை முதல்வர் பதவி அளிப்பதாகப் பேராசை காட்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இவர்களது 8 எம்எல்ஏக்கள் போதாது என்பதால், ஜேடியுவின் 43 எம்எல்ஏக்களிலும் ஒரு பகுதியை இழுக்க ஆர்ஜேடி முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு

இதனிடையே, பிஹார் தேர்தலில் சுமார் 25 தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மெகா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வி அடைந்திருந்தனர். இது அதன் மாவட்ட அரசு நிர்வாகிகளின் சதியால் ஏற்பட்டதாகவும் தேஜஸ்வீ புகார் கூறி இருந்தார்.

இப்பிரச்சினையை நீதிமன்றத்தில் வழக்காகவும் தேஜஸ்வீ தொடுக்க உள்ளார். எனவே, விரைவில் பிஹாரில் சில முக்கியத் திருப்பங்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x