Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக அந்த நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனங்கள், புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதில் முன்னோடியாக உள்ளன. எனினும், மருந்துகளை பெருமளவில் உற்பத்தி செய்ய இந்தியா, சீனாவையே அந்த நிறுவனங்கள் நம்பியுள்ளன. உலகின் மருந்து தேவையில் சுமார் 20 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது.
கரோனா வைரஸ் விவகாரத்தால் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் சீனாவை முழுமையாக ஓரம் கட்டி வருகின்றன. இப்போதைய நிலையில் சர்வதேச மருந்து நிறுவனங்கள் இந்தியாவை அதிகம் நாடி வருகின்றன.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்து, உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 'கோவிஷீல்டு' என்ற கரோனா தடுப்பூசிகளில் 50 சதவீதம் இந்தியாவுக்கும் மீதமுள்ள 50 சதவீதம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
இதுதவிர அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது 2 கரோனா தடுப்பூசிகள் அடுத்த மாதம் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 90 சதவீதம் பலன் அளிப்பதாகவும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 94.5 சதவீதம் பலன் அளிப்பதாகவும் அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறும்போது, "கரோனா தடுப்பூசி தொடர்பாக உள்நாடு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளோம். அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள 'எம்ஆர்என்ஏ-1273' கரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மாடர்னா மட்டுமன்றி பைசர் நிறுவனத்துடனும் தொடர்பில் உள்ளோம்" என்று தெரிவித்தன.
இந்திய சட்ட விதிகளின்படி வெளிநாட்டு மருந்துகளின் 2-வது, 3-வது கட்ட பரிசோதனைகளை இந்தியாவில் நடத்த வேண்டும். அதன்படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் 'கோவிஷீல்டு' கரோனா தடுப்பூசி, ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மாடர்னா நிறுவனம் முதல் கட்டமாக அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்காக கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய சுவிட்சர்லாந்தை சேர்ந்த லோன்சா நிறுவனத்துடன் மாடர்னா ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளது. மாடர்னாவின் தடுப்பூசியை மைனஸ் 20 டிகிரி செல்சியஸில் சேமித்து வைக்க முடியும் என்பதால் அந்த தடுப்பூசி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT