Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM
‘‘தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளையும் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 12-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஜூலை 21-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மாநாடு தள்ளிவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 12-வது பிரிக்ஸ் மாநாடு காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோஸா ஆகியோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, "உலகின் மிகப்பெரிய பிரச்சினையாக தீவிரவாதம் உருவெடுத்துள்ளது. தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளையும் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதனை ஆமோதித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "உலகம் ஒரு குடும்பம். இந்த குடும்பத்தில் சில கருப்பு ஆடுகளும் உள்ளன" என்று கூறினார்.
பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், அந்த நாடு தீவிரவாதத்தை ஆதரிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக ஆதரவு அளித்து வரும் சீனாவையும் அவர் மறைமுகமாக விமர்சித்ததாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநாட்டில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதேபோல உலக சுகாதார அமைப்பு, சர்வதேச செலாவணி நிதியம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றிலும் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.
கரோனா வைரஸுக்கு தேவையான மருந்துகளை சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது. இந்திய மருந்து நிறுவனங்களின் உற்பத்தித் திறனை உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன. மனித குலத்தின் நன்மைக்காக கரோனா தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து வழங்கும்.
கரோனா வைரஸ் கால கட்டத்தில் 'சுயசார்பு இந்தியா' திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம். இதன்மூலம் சர்வதேச சந்தைக்கு தேவையான பொருட்களை இந்தியா உற்பத்தி செய்து விநியோகிக்கும். பிரிக்ஸ் நாடுகளின் தனியார் நிறுவனங்கள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பிரிக்ஸ் அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பில் ரஷ்யா இருந்தது. காணொலி மாநாட்டின் போது இந்தியாவிடம் தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதன்படி அடுத்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா நடத்தும்.
அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் காணொலி வாயிலாக பங்கேற்றனர். பிரிக்ஸ் மாநாட்டில் இரு நாடுகளின் தலைவர்களும் 2-வது முறையாக காணொலி மூலமாக பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT