Published : 17 Nov 2020 06:13 PM
Last Updated : 17 Nov 2020 06:13 PM
நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே அமித் ஷா எங்களை குப்கார் கும்பல் என்று குற்றம் சாட்டுவதாக பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி பதில் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இந்தச் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் திரும்பப் பெறும் பொருட்டு, ஸ்ரீநகரில் உள்ள குப்கார் சாலையில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா இல்லத்தில் பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றின.
குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணியில் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு, அவாமி தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை இணைந்துள்ளன.
காங்கிரஸ் கட்சியும், குப்கார் கும்பலும் சேர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைத் தீவிரவாதக் காலத்துக்கும், கொந்தளிப்பான சூழலுக்கும் தள்ளிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காட்டமாகத் தெரிவித்திருந்தார்.
அமித் ஷா கருத்துக்குப் பதிலடி கொடுத்து பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தங்களை மீட்பவர்கள் என்றும், அரசியல் எதிர்க்கட்சிகளைச் சித்தரிக்கப்பட்ட எதிரிகளாகவும் உருவகப்படுத்தி இந்தியாவைப் பிளவுபடுத்துவதுதான் பாஜகவின் திட்டம்.
லக் ஜிதாக், துட்கே துட்கே எனும் சர்ச்சைகளுக்குப் பின் தற்போது குப்கார் கும்பல் என்ற வார்த்தையை, பாஜக கையில் எடுத்துள்ளது. தேசத்தில் வேலையின்மை, பணவீக்கம் அதிகரித்து வருவதையடுத்து மக்களைத் திசைதிருப்ப பாஜக முயல்கிறது.
பாஜக அரசியல் அதிகாரத்துக்காகப் பல்வேறு கூட்டணிகளை அமைக்கிறது. ஆனால், நாங்கள் சேர்ந்த கூட்டணியை மட்டும் தேசிய நலனுக்கு எதிரானது என்று கூறுகிறது.
நீண்டகாலமாகச் செய்துவந்த ஒரு பழக்கத்தைக் கைவிடுவது கடினமானது. முன்னதாக பாஜக துட்கே துட்கே கும்பல், இந்தியாவின் இறையாண்மைக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்றது. இப்போது குப்கார் கும்பல் என்று எங்களைத் தேசவிரோதியாகச் சித்தரிக்கிறது” என்று மெகபூபா முப்தி தெரிவித்தார்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் கடுமையான சொற்களால் பேசியதற்குப் பின்னணியில் எவ்வாறு மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டேன். தேர்தலை மக்கள் கூட்டணி புறக்கணிக்கத் தயாராகி வருகிறது என அமித் ஷா கூறியுள்ளார். இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் பாஜகவும், புதிதாக உருவாக்கப்பட்ட கிங்ஸ் கட்சியும் சுதந்திரமாகச் செயல்படலாம்.
ஜம்மு காஷ்மீரில் மட்டும்தான் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டால், ஜனநாயக நடைமுறையில் பங்கேற்றால் அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, தேசிய விரோதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். உண்மை என்னவென்றால், பாஜகவை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் தேசவிரோதிகள், ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள்.
நாங்கள் கும்பல் இல்லை அமித் ஷாஜி. நாங்கள் சட்டபூர்வமான அரசியல் கட்சிகள். தேர்தலில் வெற்றிக்காகப் போராடும் கட்சிகள். தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவோம்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT