Published : 17 Nov 2020 05:37 PM
Last Updated : 17 Nov 2020 05:37 PM
காங்கிரஸ் கட்சியும், குப்கார் (கும்பல்) தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணியும் சேர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைத் தீவிரவாத காலத்துக்கும், கொந்தளிப்பான சூழலுக்கும் தள்ளிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இந்தச் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் திரும்பப் பெறும் பொருட்டு, ஸ்ரீநகரில் உள்ள குப்கார் சாலையில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா இல்லத்தில் பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றின.
குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணியில் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு, அவாமி தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. இந்த குப்கார் கூட்டணியை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இணைந்துள்ள குப்கார் கூட்டணிக் கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாகச் சாடியுள்ளார்.
ட்விட்டரில் அமித் ஷா பதிவிட்டுள்ள கருத்தில், “குப்கார் கும்பல் சர்வதேச அளவில் மாறி, ஜம்மு காஷ்மீருக்குள் அந்நிய சக்திகளைக் கொண்டுவர முயல்கிறது.
காங்கிரஸ் கட்சியும், குப்கார் கும்பலில் உள்ள கட்சிகளும் சேர்ந்து ஜம்மு காஷ்மீரை மீண்டும் தீவிரவாதக் காலத்துக்கும், கொந்தளிப்பான சூழலுக்கும் தள்ள விரும்புகின்றன. 370-வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பெண்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
இப்போது இந்த உரிமைகளைப் பறிக்க குப்கார் கும்பலும், காங்கிரஸும் விரும்புகின்றன. இதனால்தான் அவர்கள் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். இந்த தேசத்தின் மக்கள் ஒருபோதும் தேசிய நலனுக்கு எதிரான புனிதமற்ற சர்வதேசக் கூட்டணியைப் பார்த்துக்கொண்டு சகித்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.
தேசிய மனநிலைக்கு ஏற்றமாதிரி குப்கார் நீந்தி வர வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் மூழ்கடித்து விடுவார்கள்.
குப்கார் கூட்டணிக் கட்சிகள் தேசியக் கொடியை அவமதிக்கின்றன. சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் குப்கார் கூட்டணியின் செயல்களுக்கு ஆதரவு தருகிறார்களா? தேசத்தின் மக்களுக்கு அவர்கள் இருவரும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாகக் கூற வேண்டும்''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT