Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இன்று 2-வது கட்ட மலபார் கடற்படை போர்ப்பயிற்சி

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா விமானம் தாங்கி போர்க் கப்பல். (அடுத்த படம்) அமெரிக்க கடற்படையின் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கப்பல்.

புதுடெல்லி

அரபிக் கடலில் 2-வது கட்டமாக மலபார் கடற்படை கூட்டு போர்ப் பயிற்சி இன்று தொடங்க உள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் இணைந்து ‘மலபார்’ கூட்டு கடற்படை போர்ப் பயிற்சியை ஆண்டுதோறும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நடத்தி வருகின்றன. முதன்முதலில் கடந்த 1992-ம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடற்படைகள் இந்திய பெருங்கடலில் ‘மலபார்’ கூட்டு பயிற்சியை நடத்தின.

அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டில் இந்த கூட்டு கடற்படை பயிற்சியில் ஜப்பானும் நிரந்தர பங்கேற்பாளராக இணைந்தது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் 3 நாடுகளும் கூட்டு கடற்படை பயிற்சி வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த கூட்டு பயிற்சி, கடந்த 2018-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் நடந்தது. 2019-ம் ஆண்டு ஜப்பானில் நடந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு பயிற்சியில் ஆஸ்திரேலியாவும் பங்கேற்றது. இதைத் தொடர்ந்து இந்த 4 நாடுகளும் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் மலபார் கடற்படை கூட்டுப் போர்ப் பயிற்சி வங்கக் கடலில் நடைபெற்றன. 2-வது கட்ட போர்ப் பயிற்சி இன்று அரபிக் கடலில் தொடங்கவுள்ளது. இதில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் கடற்படையைச் சேர்ந்த போர்க் கப்பல்கள் பங்கேற்கவுள்ளன.

இந்திய கடற்படையின் 44,500 டன் எடையுள்ள ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா, மிக்-29 கே ரக போர் விமானங்கள், அமெரிக்காவின் ஒரு லட்சம் டன் எடையுடைய யுஎஸ்எஸ் நிமிட்ஸ் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க் கப்பல் உள்ளிட்டவை பங்கேற்கவுள்ளன. மொத்தம் 4 நாட்கள் இந்த பயிற்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறும்போது, “ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா, யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கப்பல்களை மையமாக வைத்து இந்த கூட்டு போர்ப் பயிற்சி நடைபெறும். இதுமட்டுமல்லாமல் 4 நாடுகளின் கடற்படையைச் சேர்ந்த விமானம் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடற்படை விமானங்களும் பங்கேற்கஉள்ளன.

இந்தியாவின் ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் தல்வார், ஐஎன்எஸ் கந்தேரி, ஐஎன்எஸ் தீபக் ஆகிய கப்பல்களும், ஹெலிகாப்டர்கள், பி-8ஐ கடற்சார் கண்காணிப்பு விமானமும் இந்த பயிற்சியில் இணையவுள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x