Published : 16 Nov 2020 02:16 PM
Last Updated : 16 Nov 2020 02:16 PM
பிஹாரில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 70 பொதுக்கூட்டங்களைக் கூட நடத்தவில்லை. மகா கூட்டணியைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் காங்கிரஸ் கட்சி விலங்கு போட்டதுபோல் கட்டிப்போட்டது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சிவானந்த் திவாரி காட்டமாக விமர்சித்துள்ளார்.
பிஹாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து மகா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 19 இடங்களில்தான் வென்றது. கடந்த முறை தேர்தலில்கூட 27 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் இந்த முறை மிகவும் மோசமானது.
ஆனால், ஆர்ஜேடி கட்சி 75 இடங்களில் வென்று மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சி இன்னும் கூடுதலாக 20 முதல் 30 இடங்களை வென்றிருந்தால், மகா கூட்டணி ஆட்சியைப் பிடித்திருக்கும்.
இந்நிலையில் மகா கூட்டணி ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்ற ரீதியில் ஆர்ஜேடி மூத்த தலைவர் சிவானந்த திவாரி காட்டமாக விமர்சித்துள்ளார்.
சேனல் ஒன்றுக்கு திவாரி அளித்த பேட்டியில் கூறியதாவது:
''பிஹார் தேர்தலில் மகா கூட்டணியை விருப்பம் போல் செயல்படவிடாமல் சங்கிலிபோல் கட்டிப்போட்டது காங்கிரஸ் கட்சிதான். 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தொகுதிக்கு ஒரு கூட்டம் வீதம் 70 கூட்டம் நடத்தியிருக்கலாம். ஆனால், 70 பொதுக்கூட்டங்கள் கூட நடத்தவில்லை.
தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, பிஹாருக்கு ராகுல் காந்தி 3 நாட்கள் பயணம் செய்து நாள்தோறும் 2 பேரணி என்ற வீதத்தில் பங்கேற்றுப் பேசினார். அதன்பின் அவரும் பிக்னிக் சென்றுவிட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தியைப் பார்க்கவே முடியவில்லை. தேர்தல் பிரச்சாரத்துக்கு வராமல் சிம்லாவுக்கு பிக்னிக் சென்றுவிட்டார். இப்படித்தான் ஒரு தேசியக் கட்சியை நடத்துவார்களா? இதுபோன்ற குற்றச்சாட்டுகளுடன் காங்கிரஸ் கட்சியை நடத்தினால் அது பாஜகவுக்குச் சாதகமாக மாறிவிடாதா?
பிஹார் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் போட்டியிடுகிறது. இறுதியில் போட்டியிட்ட இடங்களில் வெல்ல முடியாமல் மிகக்குறைவான இடங்களில்தான் வெல்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டும்''.
இவ்வாறு திவாரி காட்டமாகப் பேசினார்.
இந்நிலையில், சிவானந்த் திவாரிக்கு காங்கிரஸ் கட்சி பதில் அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஊடகக் குழுவின் உறுப்பினரும், எம்எல்சியுமான சந்திர மிஸ்ரா கூறுகையில், “ஆர்ஜேடி கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளர் சிவானந்த் திவாரி இல்லை. ஜேடியு, பாஜகவுடன் கைகோத்துக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.
பாஜகவின் கிரிராஜ் சிங் போல திவாரி பேசுகிறார். இந்த நேரத்தில் மூளையில்லாதவர்கள் போல் உரக்கப் பேசுவர்களைக் கட்சியிலிருந்து அனுப்ப வேண்டும். கூட்டணி தர்மத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
ஆர்ஜேடி செய்தித்தொடர்பாளர் மிர்தியுன் ஜெய் திவாரி, சித்தரஞ்சன் ககன் கூறுகையில், “சிவானந்த் திவாரி பேசியது அவரின் சொந்தக் கருத்து. கட்சியின் நிலைப்பாடு இல்லை. கட்சியில் மூத்த உறுப்பினர், வழிகாட்டியாக இருப்பவர் சிவானந்த திவாரி. அவரின் கருத்துகள் தனிப்பட்டவை. தேர்தல் தோல்வி குறித்து ஆர்ஜேடி தலைமை ஆலோசனை செய்யும்” எனத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் கூறுகையில், “ஆர்ஜேடி கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளராக சிவானந்த திவாரி இல்லை. காங்கிரஸ் என்பது தேசியக் கட்சி, ஆர்ஜேடி கட்சி மாநிலக் கட்சி என்பதை திவாரி உணர வேண்டும். தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர், மாநிலத் தேர்தலில் முழுமையாக நேரத்தைச் செலவிட முடியாது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT