Published : 16 Nov 2020 11:50 AM
Last Updated : 16 Nov 2020 11:50 AM
நாட்டில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், நடப்பு ஆண்டில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை ரத்து செய்துவிட்டு, 2021-ம் ஆண்டில் பட்ஜெட் கூட்டத்தொடரோடு சேர்த்து நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா அல்லது, அடுத்த ஆண்டு ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் மட்டும் நடத்தலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
வழக்கமாக நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 2 வாரத்தில் தொடங்கி டிசம்பர் 2-வது வாரம் வரை நடைபெறும். ஆனால், இதுவரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் செய்யவில்லை. அதற்கான பணிகளும் ஈடுபடவில்லை.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்தப்படுவதென்றால், 15 நாட்களுக்கு முன்னதாகவே எம்.பி.க்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கேள்வி நேரத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை அனுப்புமாறு கோர வேண்டும். ஆனால், இதுவரை எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை” எனத் தெரிவிக்கின்றன.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால், இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்தப்பட வாய்ப்பில்லை. அவ்வாறு கூட்டம் நடத்தினாலும், நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் எம்.பி.க்களுக்கும் ஏற்படலாம். கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரிலும் இதே நிலை நீடித்து முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
அதேபோன்ற சூழல் இந்த முறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், கூட்டத்தொடர் நடத்துவது குறித்து மத்தியஅரசு மிகவும் கவனத்துடன்ஆலோசி்த்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் தற்போது டெல்லியில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை தீவிரமாகப் பரவி மீண்டும் மக்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சூழலில் குளிர்காலக்கூட்டத்தொடர் நடத்துவது எம்.பி.க்கள், ஊழியர்கள் பாதுகாப்புக்கு பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.
இதுகுறித்து மத்தியஅரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் “ மழைக்காலக் கூட்டத் தொடரின்போது டெல்லியில் நாள்தோறும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் கரோனாவில் புதிததாகப் பாதிக்கப்பட்டார்கள்.
அதனால்தான் கூட்டத்தொடர் பாதியில் முடிக்கப்பட்டது. தற்போது, 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் 30க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
இதில் நாள்தோறும் கரோனா பரிசோதனையும் நடத்தியும் பாதிக்கப்பட்டார்கள். ஆதலால், குளிர்காலக் கூட்டத்தொடர், பட்ஜெட் தொடரும் 2021-ம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT