Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM
ஒரு திருடனைப் பிடிக்க லட்சக்கணக்கான மக்களைத் துன்புறுத்தும் வகையில் சட்டம் கொண்டு வருவது அதர்மம் என்று மகாபாரதத்தில் விதுரர் கூறுகிறார்.
நவீன இந்திய வரலாற்றில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி பிரகடனம் ஒரு சோகமான நிகழ்வு. இதில் 2-வது சோகம் என்னவென்றால் அந்த எமர்ஜென்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பயங்கரமான சட்டங்களை ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பது. அப்படி கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களில் ஒன்றுதான் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் (எப்சிஆர்ஏ). இந்தச் சட்டத்தில் கடந்த மாதம் திருத்தம் கொண்டு வரப்பட்ட பின்னர் இது மிகவும் கடுமையான சட்டமாக மாறியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள அறக்கட்டளை, என்ஜிஓ அமைப்புகளுக்கு வரும் நன்கொடைகளை முறைப்படுத்துவதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தம், அரசு சாரா அமைப்புகள் (என்ஜிஓ) மூலம் ஏழை மக்கள் நலனுக்காகவும், அவர்களது மேம்பாட்டுக்காகவும் உழைத்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மத்தியில் பீதியை தோற்றுவித்துள்ளது. இந்த சட்டமானது சர்வதேச அறக்கட்டளை அமைப்புகளிடையே நமது நாட்டுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அந்த அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. எனவே, இந்தியாவுக்கு நன்கொடை தருவதற்கோ, நிதியுதவி அளிக்கவோ சர்வதேச கொடையாளர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். எனவே இந்தியாவுக்கு வரவேண்டிய நிதி, மற்ற நாடுகளுக்குச் சென்று விடுகிறது.
மத மாற்றத்தைத் தடுக்கவும், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும் இந்தச் சட்டத்தைத் திருத்தியதாக மத்திய அரசு காரணம் தெரிவிக்கிறது. ஆனால், நிஜத்தில் இது ஆயிரக்கணக்கான அப்பாவி அறக்கட்டளைகள் நல்ல செயல்கள் செய்ய முட்டுக்கட்டை போடுகிறது. இந்த சட்டத்தில் பல்வேறு எதிர்மறையான பிரிவுகள் அடங்கியுள்ளன. இதில் இரண்டை மட்டும் நான் குறிப்பிடுகிறேன். ஒன்று, வெளிநாட்டு நன்கொடையை ஒரு அமைப்பில் இருந்து மற்றொரு அமைப்புக்கு மாற்றுவதைத் தடை செய்கிறது. இந்த சிக்கலை ஒரு நிஜ வாழ்க்கை உதாரணத்துடன் விளக்குகிறேன்.
வாசிப்பு மற்றும் எண் கணிதத்தில் குழந்தைகளின் கற்றலை மேம்படுத்துவதற்கான கல்வித் திட்டத்தை ஒரு சர்வதேச அறக்கட்டளை கண்டறிகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது, அந்த சர்வதேச அறக்கட்டளையானது, ஒரு நற்பெயரைப் பெற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த அரசு சாரா அமைப்புக்கு அந்த நிதியை வழங்கி, தான் கண்டறிந்த திட்டத்தை அமல்படுத்துமாறு கூறுகிறது.
இப்போது அந்த என்ஜிஓ அமைப்பானது, பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள பள்ளிகளுடன் இணைந்து திறம்பட செயல்பட்டு சாதனை படைத்து வரும் 10 உள்ளூர் என்ஜிஓ அமைப்புகளைத் தேர்வு செய்து அந்த திட்டத்தை செயல்படுத்த அழைக்கிறது. ஆனால் இதுபோன்ற செயல்படுத்துதலை, புதிய எப்சிஆர்ஏ சட்டத் திருத்தம் சட்டவிரோதம் என்று சொல்கிறது.
இதனால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான உள்ளூர் என்ஜிஓ அமைப்புகள் பீதியடைந்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடையை நம்பியே பல்வேறு அறிவியல் ஆராய்ச்சித் திட்டங்கள் நமது நாட்டில் உள்ளன. ஒருவேளை எப்சிஆர்ஏ சட்டத் திருத்தம் முன்னதாகவே கொண்டு வரப்பட்டிருந்தால் இந்தியாவில் பசுமைப் புரட்சியே வந்திருக்காது. ராக்பெல்லர் பவுண்டேஷன் என்ற அமைப்புதான் அதிக மகசூலைத் தரும் கோதுமையைக் கண்டறிந்து அதை இந்தியாவில் செயல்படுத்தியது நினைவிருக்கலாம்.
இந்த சட்டத்தில் உள்ள 2-வது பிரிவானது, என்ஜிஓ-க்களின் நிர்வாகச் செலவுகளுக்கு 20 சதவீத வரம்பு விதிக்கப்பட்டுள்ளதாகும். இது மிகப்பெரிய எதிர்ப்பைத் சம்பாதித்துள்ளது. இப்படி செலவுகளுக்கு வரம்பு விதிக்கும் போது இந்த என்ஜிஓக்கள், சமூகத்தில் எப்படி பணியாற்றுவார்கள் என்ற கேள்வி எழுகிறது. வெளிநாட்டு நிதியில் இருந்து என்ஜிஓக்கள் நடத்தும் இன்ஸ்டிடியூஷன்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு மையங்கள் போன்றவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் செலவுக்காக பணம் எடுக்க வேண்டியுள்ளது. இந்தச் செலவுகள் நிர்வாகம் அல்லாத பிரிவில் சேர்க்கப்படுகின்றன. இதை இந்தச் சட்டத்திருத்தம் எதிர்க்கிறது.இந்த நிலையில் எமர்ஜென்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இதுபோன்ற சட்டம் தேவையா என்ற கேள்வி எழுகிறது.
தற்போது நடைமுறையில் அனைத்து வெளிநாட்டு நிதி வழங்கப்படுதல்… அதாவது தனிநபர், தொழிற்சாலைகள், அரசு சாரா அமைப்புகளுக்கு நிதி வழங்கப்படுவது மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆனால், அறக்கட்டளை அமைப்புகளிடம் இருந்து நிதி வரும்போது மட்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வருகிறது. இந்த நிலை ஏன் என்ற கேள்வி எழுகிறது.
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த எப்ஏடிஎப் (நிதி செயல் பணிக்குழு) உள்ளது. பெரும்பாலான நாடுகள் தீவிரவாதத்துக்கு வரும் நிதியைக் கட்டுப்படுத்த நிதி செயல் பணிக்குழு (எப்ஏடிஎப்) முறையைதான் கடைபிடிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் என்ஜிஓ-க்கள் ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகளின் கீழ் அதாவது இந்திய ரிசர்வ் வங்கி செயல்படுத்தும் பிஎம்எல்ஏ (சட்டவிரோத பணப்பரிவர்த்தனை), வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு அமைப்புகளின் கீழ் வருகின்றன.
சமூக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை பட்டியலிடுவதற்காக இந்திய பங்குச் சந்தையின் (செபி) கீழ் ஒரு வெளிப்படையான சமூக பங்குச் சந்தை, ஒரு மின்னணு நிதி திரட்டும் தளத்தை உருவாக்குவதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-ல் தந்த வாக்குறுதியை செயல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது.
இந்த மாற்றம் இந்தியாவில் நல்லது செய்ய விரும்புபவர்களுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் விஷயத்தை எளிதாக்குகிறது. தீவிரவாதிகளைப் பிடிக்கும் வேலையைச் செய்ய இந்த மாற்றம் எளிதாக்குகிறது. இந்த விஷயத்தில் பாஜக அரசு மீது குறை கூறி பலன் இல்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மோசமான வழியில் நடந்து கொண்டது. கடந்த 2010-ம் ஆண்டில் எப்சிஆர்ஏ சட்டத்தை கடுமையாக்கியது காங்கிரஸ் தலைமையிலானஅரசுதான்.
மகாபாரதத்தில் திருதராஷ்டிர அரசனுக்கு விதுரர் தர்மத்தைப் போதிக்கிறார். அவரது போதனைகளானது மக்களுக்கு நல்லது செய்வதில் தொடங்கி நல்லது செய்வதிலேயே முடிகிறது. ஒரு திருடனைப் பிடிப்பதற்காக ஒரு சட்டம் கொண்டு வரப்படும்போது அதனால் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால் அது அதர்மம் என்று விதுர நீதி சொல்கிறது. ஆனால் இந்த அரசானது சுய சான்றளிப்பை அமல்படுத்திய போது அது தர்மத்தின் செயலாகவே பார்க்கப்பட்டது. ஆனால் எப்சிஆர்ஏ சட்டத்திருத்தமானது அதர்மமாகும்.
அதிகபட்ச ஆளுகை மற்றும் குறைந்தபட்ச அரசு என்ற கொள்கையை கடைப்பிடித்து சேதத்தைத் தவிர்க்க வேண்டிய நேரம் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT