Published : 15 Nov 2020 05:20 PM
Last Updated : 15 Nov 2020 05:20 PM

‘‘மேற்கு வங்க மக்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வந்தவர்’’-  சௌமித்திர சட்டர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி

புகழ்பெற்ற வங்கமொழி நடிகர் சௌமித்திர சட்டர்ஜி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உலகின் புகழ்மிக்க இயக்குநர்களில் ஒருவராகக்கொண்டாடப்படும் சத்யஜித்ரே இயக்கிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தவர் சௌமித்திர சட்டர்ஜி. சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை சௌமித்திர சட்டர்ஜி பெற்றுள்ளார்.

2004ல் மத்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்றுள்ளார். திரைப்படத்துறையினருக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 2012ல் சௌமித்திர சட்டர்ஜி பெற்றார். நீண்டகால நோய்களின் தாக்கத்தினால் இன்று கொல்கத்தா தனியார் மருத்துவமனை பெல்லி வ்யூ கிளினிக்கில் அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

— Narendra Modi (@narendramodi) November 15, 2020

ட்விட்டரில் பிரதமர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘ சௌமித்திர சட்டர்ஜியின் மரணம், உலக சினிமாவுக்கும், மேற்கு வங்கம் மற்றும் இந்திய கலாச்சார வாழ்வியலுக்கும் பெரும் இழப்பு. மேற்கு வங்க மக்களின் உணர்வுகள், பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை அவர் தனது பாத்திரப் படைப்புகள் மூலம் வெளிக்கொண்டு வந்தார். அவரது மறைவால் வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி’’ என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x