Published : 15 Nov 2020 04:01 PM
Last Updated : 15 Nov 2020 04:01 PM
கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல் உடல்நலக்குறைவால், தீவிர மருத்துவச் சிகிச்சைப் பிரிவில் அனுமதி்க்கப்பட்டுள்ளார் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி. அகமது படேல்(71). கடந்த அக்டோபர் 1-ம் தேதி கரோனாவில் பாதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கரோனாவிலிருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை. இந்நிலையில் குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் நேற்று அகமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அகமது படேல் மகன் பைஷல் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ கடந்த சில வாரங்களுக்கு முன் அகமது படேலுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது என்பதை குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கிறோம். தற்போது உடல்நலக்குறைவால் குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஐசியு சிகிச்சைப் பிரிவில் அகமது படேல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அகமது படேல் உடல்நிலை சீராக இருக்கிறது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அகமது படேல் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில் " கரோனாவில் பாதிக்கப்பட்ட அகமது படேலின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்ககப்பட்டநிலையில் அந்த பாதிப்பு மற்ற உடல்உறுப்புகளும் பரவியதால்தான் அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது" எனத் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் விரைவாக குணமடைய பல்வேறு காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆனந்த் சர்மா ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ என்னுடைய நண்பர், காங்கிரஸ் போர் வீரர் அகமது படேல் உடல்நலக்குறைவை நினைத்து கவலைப்படுகிறேன். அவர் விரைவாக குணமடைந்து நல்ல உடல்நலத்துடன் வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் சிங்வி, தருண் கோகய் , மோதிலால் வோரா, குலாம்நபி ஆசாத், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயாடு ஆகியோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டாலும் அவர்கள் குணமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT