Published : 15 Nov 2020 07:57 AM
Last Updated : 15 Nov 2020 07:57 AM
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறித் தாக்குதல் நடத்தியதையடுத்து, அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தது.
ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா, குப்வாரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளான தாவார், உரி, கீரன், நவுகம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தினர்.
இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர், எல்லைப் பாதுகாப்புப் படை துணை ஆய்வாளர் ஒருவர், பொதுமக்கள் 6 பேர் இந்தியா தரப்பில் வீரமரணம் அடைந்தனர்.
இந்தியா தரப்பில் அளித்த பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.மேலும், இந்தத் தாக்குதல் நடந்துக் கொண்டிருந்தபோது எல்லையில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளையும் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
தீபாவளிக் கொண்டாடப்படும் அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்ட பாகிஸ்தானுக்கு கடும் கண்டனத்தை இந்தியா பதிவு செய்தது. அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தினர் தி்ட்டமிட்டே அப்பாவி மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத்தின் இதுபோன்ற நடவடிக்கை மிகவும் வெட்கக்கேடானது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நேரத்தில் இந்தியாவில் அமைதியைக் குலைத்து, ஜம்மு காஷ்மீரில் வன்முறையைத் தூண்டும் நோக்கில் பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. எல்லையில் அத்துமீறி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு கடும் கண்டனத்தையும், எதிர்்ப்பையும் மத்திய அரசு பதிவு செய்தது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் 5 பேர், பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர், 19 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் உள்ள அப்பாவி மக்களை தொடர்ந்து குறி வைத்து தாக்குதல் நடத்துவதற்கும் கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அப்பாவி மக்கள் மீது சக்தி வாய்ந்த ஆயுதங்களையும், ராக்கெட் குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அமைதியைக் குலைக்க வேண்டும், வன்முறைையத் தூண்ட வேண்டும் என்று நோக்கத்தோடு திட்டமிட்டு பாகிஸ்தான் செயல்படுகிறது.
பாகிஸ்தான் ஏற்கெனவே செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, தன்னுடைய எல்லைப்பகுதியில் எந்தவிதமான தீவிரமான செயல்களையும் இந்தியாவுக்கு எதிராக அனுமதிக்கக்கூடாது.
தன்னுடைய எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ தொடரந்து பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. தீவிரவாதிகளுக்குத் தேவையான உதவிகளையும், பாகிஸ்தான் ராணுவம் வழங்கி வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவி்த்துள்ளது.
2020ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இதுவரை 4,052 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு 3,233 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT