Published : 14 Nov 2020 04:57 PM
Last Updated : 14 Nov 2020 04:57 PM
மகாராஷ்டிர மாநிலத்தில் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் 8 மாதங்களுக்குப் பின், வரும் திங்கள்கிழமை திறக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் நாட்டில் பரவத் தொடங்கியவுடன் மகாராஷ்டிராவில் மார்ச் 22ஆம் தேதியோடு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. ஆனால், அர்ச்சகர்கள் மூலம் வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்தன. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அதன்பின் நடந்த விநாயகர் சதுர்த்தி, ஹோலி பண்டிகை, துர்கா பூஜை, தசரா என அனைத்திலும் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் 8 மாதங்களுக்குப் பின் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''தீபாவளித் திருநாள் வாழ்த்துகளை மக்களுக்குத் தெரிவிக்கிறேன். நம்மிடையே இன்னும் கொடூர கரோனா வைரஸ் அரக்கன் இருக்கிறது என்பதை மறக்க முடியாது. இருந்தாலும்கூட இந்தக் கரோனா வைரஸ் மெல்ல அமைதியாகியுள்ளது. இதற்காக நாம் ஆறுதல் கொள்ள முடியாது. மக்கள் தொடர்ந்து ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஹோலி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஈகைத் திருநாள் உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடும்போது கடைப்பிடித்த ஒழுக்கத்தையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
கரோனா காலத்தில் இருந்து வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டாலும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள் உருவில் கடவுள் வந்து அனைத்துப் பக்தர்களையும் காத்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் தீபாவளிக்கு மறுநாள் அதாவது திங்கள்கிழமை முதல் திறக்கப்படும்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காகக் கோயிலுக்குச் செல்லும்போது, உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கூட்டத்தைக் குறைக்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களைத் திறக்கமாறு உத்தரவிட்டது அரசின் உத்தரவு அல்ல. இது கடவுளின் விருப்பம்.
கோயில்களில் செருப்புகள், ஷூக்களை வெளியில் விட வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நாம் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால், கடவுளின் ஆசியைப் பெறலாம்''.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
நாட்டில் லாக்டவுன் அன்-லாக் செயல்முறைகள் நடைமுறைக்கு வந்தபின்பும் மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படாமல் இருப்பது குறித்து பாஜக கடுமையாக விமர்சித்து வந்தது. இதற்குப் பதில் அளித்த முதல்வர் உத்தவ் தாக்கரே, கோயில்களில் சமூக விலகலைக் கடைப்பிடித்தல் கடினமானது. ஆதலால், உரிய நேரம் வரும்போது வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT