Published : 14 Nov 2020 02:47 PM
Last Updated : 14 Nov 2020 02:47 PM
பாஜக புதைத்த பழைய ஊழல்களை எங்களாலும் தோண்டியெடுக்க முடியும். அவர்கள் விரும்பினால் எடுக்கிறோம். பல எலும்புகளையும் எடுத்துப் பார்க்க வேண்டியதிருக்கும் என்று சிவசேனா எம்.பி.யும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிர பாஜகவின் முன்னாள் எம்.பி. கீர்த்தி சோமையா கடந்த இரு நாட்களுக்கு முன் முதல்வர் உத்தவ் தாக்கரே மீது குற்றச்சாட்டு கூறியிருந்தார். அதில், "உள் அரங்கு வடிவமைப்பாளர் அன்வி நாயக் குடும்பத்துக்கும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குடும்பத்துக்கும் நிலத் தகராறு இருந்தது. அதில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
அந்தத் தற்கொலையின் விசாரணையை அர்னாப் கோஸ்வாமி மீது உத்தவ் தாக்கரே திசைதிருப்பிவிட்டார். ஆதலால், நிலத் தகராறு குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று கீர்த்தி சோமையா குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதில் அளித்து சிவசேனா எம்.பி.யும், தலைமைச் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''பாஜக தலைவர் கீர்த்தி சோமையா தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியதை சிவசேனா கட்சி தீவிரமாக எடுக்காது. ஆனால், எதைத் தீவிரமாக எடுக்கவேண்டுமோ அதைத் தீவிரமாக எடுப்போம்.
எதிர்க்கட்சிகள் எங்களை விமர்சிக்க வேண்டும். மாநிலத்தில் வலிமையான எதிர்க்கட்சி தேவை என்பதை நாங்கள் விரும்புகிறோம். உத்தவ் தாக்கரே, பாலசாஹேப் தாக்கரே இருவரையும் நன்கு புரிந்தவர்களுக்குத் தெரியும். நாங்கள் ஒருபோதும் எதிர்க்கட்சியினரை அடக்கவோ, அவர்களின் உரிமையை, குரலை நசுக்கவோ இல்லை. மற்ற மாநிலங்களில் மத்திய அரசு செய்ததுபோல் நாங்கள் செய்தது இல்லை.
ஆதலால் தவறான, பொய்யான குற்றச்சாட்டுகளை பாஜகவினர் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பினால் அவர்கள் புதைத்து சமாதி கட்டிய பழைய ஊழல்களை, எங்களாலும் தோண்டியெடுக்க முடியும். அவ்வாறு தோண்டியெடுத்தால் ஏராளமான எலும்புகளை எடுக்க வேண்டியதிருக்கும். எங்களைப் பொறுத்தவரை பழையவற்றை மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்வதுதான்.
கடந்த ஆண்டு இதே தீபாவளி சமயத்தில்தான் மகாவிகாஸ் கூட்டணி உருவாக்குவது குறித்துப் பேசப்பட்டது. வரும் 28-ம் தேதியோடு மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசு முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது.
இந்த ஓராண்டில் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு, மனிதனால் உருவாக்கப்பட்ட, இயற்கை விளைவித்த பல்வேறு சவால்களைக் கடந்து வந்துள்ளது. முதல்வரும் கடந்துள்ளார்.
எங்கள் அரசைக் கவிழ்க்க பல்வேறு சட்டத்துக்கு மாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், ஏதும் வெற்றியடையவில்லை. கடந்த ஆண்டு, எதிர்க்கட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து ஆட்சியைக் கவிழ்க்க முயன்றது. ஆனால், சிறிய கீறல்கூட அரசின் மீது விழவில்லை.
ஆதலால், ஆப்ரேஷன் லோட்டஸ் எனும் வார்த்தையை இங்கு உச்சரிப்பதைவிட்டு, அரசுடன் இணைந்து மக்களுக்காக எதிர்க்கட்சி உழைக்க வேண்டும்.
உத்தவ் தாக்கரே அரசின் நிர்வாகத்தில் யாருக்கும் எந்த விதமான சந்தேகமும் இல்லை. முழுமையாக 5 ஆண்டுகளை நாங்கள் நிறைவு செய்வோம். மீதமுள்ள காலத்துக்கும் தாக்கரே முதல்வராக இருப்பார்.
மீதமுள்ள 4 ஆண்டுகளும் மக்களின் நலனுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காவும் உழைப்போம். பழைய விஷங்களை மறந்துவிட்டு, மகாராஷ்டிராவை வலிமையாக்க வேண்டும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்''.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT