Published : 14 Nov 2020 09:49 AM
Last Updated : 14 Nov 2020 09:49 AM
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பல இடங்களில் சிவசேனா கட்சி டெபாசிட் இழந்ததன் மூலம் சிவசேனா கட்சி ‘சவ’(சடலம்) சேனாவாக மாறிவிட்டது என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர், பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் கிண்டல் செய்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்த சிவசேனா கட்சி, “ஒவ்வொரு எழுத்தும் முக்கியமானது என்பதை அம்ருதா உணர வேண்டும்” எனப் பதிலடி கொடுத்தது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிட்டு பல்வேறு இடங்களில் டெபாசிட்டை இழந்தது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருக்கும் சிவசேனா, பிஹார் தேர்தலில் எதிராகப் போட்டியிட்டது.
பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ட்விட்டரில் சிவசேனா கட்சியைக் கிண்டல் செய்து வியாழக்கிழமை பதிவிட்டிருந்தார்.
அதில், “பிஹார் தேர்தலில் சிவசேனா கட்சியின் நிலைமை சவ-சேனா ஆக மாறிவிட்டது. உண்மையில் என்ன நடக்கிறது. பிஹார் தேர்தலில் சிவசேனா கட்சி தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸையே வீழ்த்திவிட்டது.
மகாராஷ்டிராவை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் உண்மையில் பிஹாரில் காங்கிரஸைச் சரியான இடத்தில் வைத்தமைக்கு நன்றி” எனக் கிண்டல் செய்திருந்தார்.
இதற்குப் பதிலடி தரும்வகையில் சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலம் கோர்கே அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “அம்ருதா... உங்களின் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தின் முக்கியத்துவத்தை உணருங்கள். உங்கள் (அம்ருதா-Amrutha) பெயரில் ஆங்கில எழுத்தில் ஏ என்ற வார்த்தையை நீக்கிவிட்டால் மிருதா என்று (mrutha) வந்துவிடும். (இது மராத்தியில் இறந்துவிட்ட என்று பொருள்). ஆதலால் உங்கள் பெயரில் ஏ எனும் எழுத்தின் முக்கியத்துவத்தை உணருங்கள்.
தீபாவளி போன்ற நன்னாளில் உங்கள் மனதில் கெட்ட எண்ணங்களைக் கொண்டுவராதீர்கள். சிவசேனாவைக் கிண்டலடிப்பது, சீண்டுவது, திட்டுவதன் மூலம் எந்தப் பயனையும் நீங்கள் அடைய முடியாது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT