Published : 14 Nov 2020 08:58 AM
Last Updated : 14 Nov 2020 08:58 AM
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நேற்று நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இந்தியா தரப்பில் அளித்த பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர். அவர்களின் பல்வேறு பதுங்குக் குழிகள் அழிக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டன.
ஜம்மு காஷ்மீரின் குரேஸ் மற்றும் உரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறலில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர், எல்லைப் பாதுகாப்புப்படை துணை ஆய்வாளர் ஒருவர், பொதுமக்கள் 6 பேர் இந்தியா தரப்பில் வீரமரணம் அடைந்தனர்.
இதுகுறித்து ஸ்ரீநகரைச் சேர்ந்த ராணுவச் செய்தித்தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் காலியா கூறியதாவது:
''ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டியுள்ள தாவார், உரி, கீரன், நவுகம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நேற்று தாக்குதல் நடத்தினர். சிறிய பீரங்கிகள், ராக்கெட் குண்டுகளையும் கிராமங்களில் உள்ள வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 4 பேர், பிஎஸ்எப் துணை ஆய்வாளர் ஒருவர் வீரமரணம் அடைந்தனர். 4 வீரர்கள் காயமடைந்தனர்.
கமால்கோட், உரி பகுதியில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். பால்கோட் பகுதியில் உள்ள ஹாஜி பீர் பகுதியில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் பகுதியில் இஸ்மார்க், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கீரன் செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். பூஞ்ச் மாவட்டத்திலும் ஷாபூர், குவாஸ்பா, கிர்னி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
குப்வாரா மாவட்டம் கீரன் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது, அதைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களின் முயற்சியையும் இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். கடந்த ஒரு வாரத்தில் 2-வது முறையாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். கடந்த 7-ம் தேதி இதேபோன்று ஊடுருவ முயன்றபோது 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவத்தினர் தரப்பில் நடத்திய பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 8 பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அமைத்திருந்த பதுங்குக் குழிகள், ராணுவ நிலைகள், தீவிரவாத முகாம்கள், எரிபொருள் கிட்டங்கிகள் போன்றவை மீது இந்திய ராணுவம் குண்டுகளை வீசி அழித்தது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் உள்கட்டமைப்பு பகுதி கடுமையாகச் சேதம் அடைந்தன''.
இவ்வாறு ராஜேஷ் தெரிவித்தார்.
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தினரின் பதுங்குக் குழிகள், ராணுவநிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அவை வெடித்துச் சிதறும் வீடியோ காட்சிகளை ராணுவத்தினர் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT