Published : 26 Oct 2015 07:46 PM
Last Updated : 26 Oct 2015 07:46 PM
சாலை ஓரம் தாபா நடத்துபவர், தசராவில் ஒரு நாள் ராஜாவாக குதிரையில் அமர்த்தி கொண்டாடப்படுகிறார். இந்த வினோத சம்பவம் உபியின் ஆக்ராவில் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.
ஆக்ராவில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பாமன் கிராமம். இங்கு கடந்த வாரம் முடிந்த தசரா பண்டிகையின் இறுதி நாளை தம் பகுதி ராஜாவின் பிறந்த நாளாக கொண்டாடுகின்றனர். இவர்கள் தம் ராஜாவாகக் கருதும் அப்பகுதிவாசியான 50 வயதான ஜ்வாலா சிங் என்பவரை குதிரையில் அமர வைத்து ஊர்வலம் நடத்தினர். இந்த ஒருநாள் மட்டும் ராஜாவான ஜ்வாலா சிங், வருடம் முழுவதும் அக்கிராமத்தின் சாலை ஓரம் தாபா எனும் சிற்றுண்டி விடுதி நடத்துகிறார். இந்த ராஜாவின் ஒருநாள் வருமானம் ரூபாய் 100 முதல் 150 ஆகும்.
கடந்த வியாழன் அன்று ஜ்வாலா சிங்கின் தலையில் ராஜாக்கள் அணியும் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகை, பழங்காலத்து பாணியில் வெள்ளை நிற கவுன் மற்றும் நீளமான பாத அணிகள் என கம்பீரமாக கோஷங்களுக்கு இடையே குதிரையுடன் வலம் வந்திருக்கிறார். கிராமம் முழுவதும் சென்ற அந்த ஊர்வலத்தில் பாமனின் சிறுவர்கள் ராஜாவிடம் ஆசீர்வாதம் பெற்றனர். இவர்களை ஆசீர்வதிக்கும் வகையில் ராஜா அனைவருக்கும் வெற்றிலையை தந்திருக்கிறார். அக்கம், பக்கம் உள்ள கிராமத்தவர்களும் கலந்து கொண்ட இந்த ராஜா ஊர்வலம் கடந்த 150 வருடங்களாக தவறாமல் தசராவில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அக்கிராமத்தின் 88 வயதான பூசாரி மித்தன் லால் சர்மா ’தி இந்து’விடம் கூறுகையில், ‘ஜ்வாலா சிங்கின் முன்னோர்கள் தான் இந்த பகுதியில் வாழ்ந்த ஒரு லட்சம் வாசிகளின் ராஜாக்களாக ஆட்சி புரிந்து வந்தனர். காலப்போக்கில் அவர்கள் சொத்தும், ராஜவாழ்க்கையும் பறி போய் விட்டது. இதனால், தாபா நடத்தினாலும் அந்த பரம்பரையில் பிறந்தமைக்காக ஜ்வாலா சிங்கை இந்த ஒருநாள் மட்டும் நாம் ராஜாவாகவே கருதுகிறோம். இதன் கடைசி ராஜாவின் பிறந்த நாளை தசராவில் கொண்டாடி மகிழ்கிறோம். இதற்கான சிறப்பு பூஜை எங்கள் ராஜாவின் குலதெய்வமான ஆஷாவரி தேவி கோயிலில் நடைபெற்றது. இந்த வருடம் சற்று தாமதமாக செய்த ஏற்பாடுகளின் காரணமாக எங்கள் ராஜாவிற்கு பேண்டு வாத்தியம் கிடைக்கவில்லை. இதனால், அவர் எங்கள் மீது கோபமாக இருக்கிறார்.’ எனத் தெரிவித்தார்.
16 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தின் தலைவரான ஜ்வாலா சிங்கின் கொள்ளுத் தாத்தாவான பல்வந்த் சிங் இப்பகுதியின் கடைசி ராஜாவாக இருந்திருக்கிறார். ‘ராஜா கி பைசி’ எனும் பெயரிலான அவரது அரசில் பிராமணர் மற்றும் ஜாத்தவ் உட்பட பல்வேறு சமூகத்தினருக்கு அதிகமான நிலங்களை தானமாக அளித்து விட்டாராம். இதன் பிறகு அரசின் நில ஆக்கிரமிப்பு சட்டத்தால் அனைத்தும் இழந்து ஏழையாகி விட்ட குடும்பத்தை ஜ்வாலா சிங், தாபா நடத்தி காப்பாற்றி வருகிறார். இவரது தாபாவில் தன் ராஜ அந்தஸ்தை குறிப்பிடும் வகையில் ரொட்டியை இலவசமாக கொடுத்து அதன் கூட்டு, பொறியலுக்கு மட்டும் விலை வைத்திருக்கிறார் ஜ்வாலா சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT