Published : 12 Nov 2020 07:19 PM
Last Updated : 12 Nov 2020 07:19 PM

‘‘முதல்வர் பதவிக்கு நான் உரிமை கோரவில்லை; தே.ஜ.கூட்டணி இறுதி முடிவெடுக்கும்’’ - நிதிஷ் குமார் திட்டவட்டம்

புதுடெல்லி

முதல்வர் பதவிக்கு நான் உரிமை கோரவில்லை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தன.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத் துக் கொண்டது.

இதில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

ஆர்ஜேடி கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்தன. அந்த கூட்டணியில் ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19, சிபிஎம்-எம்எல் 12, இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2 இடங்களை பெற்றன.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஓரிடத்தை மட்டுமே கைப்பற்றியது.

பாஜக - ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இதுகுறித்து கூறியதாவது:

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். இந்த கூட்டணியே ஆட்சியமைக்கும். பதவியேற்பு விழா தீபாவளிக்கு பிறகு நடைபெறலாம். எனினும் இப்போது ஏதும் கூற முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகே இதுபற்றி இறுதி முடிவெடுக்கப்படும். முதல்வர் பதவிக்கு நான் உரிமை கோரவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் தான் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x