Published : 01 Oct 2015 10:52 AM
Last Updated : 01 Oct 2015 10:52 AM
உ.பி.யில் பக்ரீத் பண்டிகைக்காக பசுவை பலி கொடுத்ததாக கிளம்பிய வதந்தியால் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லிக்கு மிக அருகில் இருக்கும், உ.பி.யின் கவுதம புத்தர் மாவட்டத்தின் தாத்ரியில் உள்ள கிராமம் பிசோதா. இங்கு 58 வயதான இக்லாக் என்பவர் வீட்டில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பசு பலி கொடுக்கப்பட்டதாக கடந்த திங்கள்கிழமை இரவு வதந்தி கிளம்பியது. இதைதொடர்ந்து பிசோதா மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் இக்லாக் வீட்டில் திடீர் என புகுந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்கினர். இதில் இக்லாக் அதே இடத்தில் உயிரிழந்தார். அவரது தாய் அஸ்கரி (70), மனைவி இக்ராமன் (52), இளைய மகன் தானிஷ் (21), மகள் ஷாஹிஸ்தா(16) ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் தானிஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து 5 கிராமங்களில் பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் 800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து இக்லாக்கின் தாய் அஸ்கரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “திங்கள் கிழமை இரவு முதலே ஒரு கும்பல் எங்கள் வீட்டின் முன் திரண்டு கடுமையாக திட்டியபடி இருந்தது. இதனால் எங்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாக்குதல்களில் ஈடுபட்டனர். எனது மகன் உயிர் போகும் வரை அடித்து வீட்டின் முன் உடலை போட்டுச் சென்றனர். இதில் எனது பேரன், பேத்தி மற்றும் மருமகளையும் விட்டு வைக்கவில்லை. இவர்களுக்கு பயந்து குளியல் அறையில் பதுங்கிய என்னை தாழ்ப்பாளை உடைத்துவிட்டு தாக்கினர்” என்றார்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்களுக்கு ஆடு மற்றும் எருதுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். உ.பி.யில் பசுவை கொல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், யாரோ பசுவை குர்பானி கொடுத்து அதன் இறைச்சியை இக்லாக்கிற்கு கொடுத்ததாகவும், அதை அவர் பிரிஜ்ஜில் வைத்து சாப்பிட்டுவதாகவும் பிசோதா கிராமத்தில் வதந்தி பரவியது. இதனை அங்குள்ள கோயில் மைக்கில் அறிவிக்கச் செய்து, சுற்றுப்புற மக்களை திரட்டி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இக்லாக் வீட்டில் இருந்தது ஆட்டின் இறைச்சியே என்றும் தங்களுக்கு வேண்டாத சிலர் வதந்தி கிளப்பியதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், விவேக், ரூபேந்தர், ஸ்ரீஓம், சந்தீப், சவுரப், கவுரவ் ஆகிய 6 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
முன்னதாக, பசு மாட்டை பலி கொடுத்தவர்களை கைது செய்யக் கோரி அருகிலுள்ள நெடுஞ்சாலையில் மறியல் நடைபெற்றது. போராட்டக்காரர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ராகுல் யாதவ் என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த இக்லாக் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், படுகாயம் அடைந்த தானிஷின் சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரமும் வழங்குவதாக உ.பி. அரசு அறிவித்துள்ளது.
இக்லாக்கின் மூத்த மகன் சர்தாஜ் ராணுவத்தில் இணைந்து சென்னை முகாமில் பணியாற்றி வருகிறார். பிசோதாவில் சுமார் 70 ஆண்டுகளாக வசித்து வரும் குடும்பத்துக்கு நேர்ந்த துயரத்துக்கு போலீஸார் உரிய நேரத்தில் செல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT