Published : 12 Nov 2020 01:06 PM
Last Updated : 12 Nov 2020 01:06 PM
பிரதமர் மோடியின் செயல்களால், கொள்கைகளால் வரலாற்றில் முதல் முறையாக இந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதித்தது. தொழில்கள், வர்த்தகம், சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மைனஸ் 23.96 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கையிலும், நடப்பு நிதியாண்டில் 3, 4-வது காலாண்டில்தான் பொருளதாரம் மீளத் தொடங்கும். இருப்பினும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இருக்காது. மைனஸில்தான் இருக்கும் எனக் கணித்தது.
அதற்கு ஏற்றாற்போல் ஏப்ரல்-ஜூன் மாத முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 24 சதவீதம் மைனஸில் சென்றது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் மைனஸ் 8.6 சதவீதம் வீழ்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
2-வது காலாண்டு பொருளாதார வளர்ச்சி வீதம் குறித்து மத்திய அரசு வரும் 27-ம் தேதிதான் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கும் என்றாலும், பல்வேறு பொருளாதார ஆராய்ச்சி நிறுவனங்கள் வளர்ச்சி வீதம் குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளன.
இதன்படி, வரலாற்றில் முதல் முறையாக இந்தியா "டெக்னிக்கல் ரிசஸன்" நிலைக்குச் சென்றுள்ளது. பொருளாதாரத்தில் ரிசஸன் எனப்படுவது மந்தநிலையைக் குறிக்கும். பொருளாதார வளர்ச்சி தேக்கமடைதல், நிறுவனங்கள் மூடல், வேலையின்மை, விலைவாசி அதிகரிப்பு, பொருட்கள் உற்பத்தி பாதிப்பு போன்ற பாதிப்புகள் இந்த காலகட்டத்தில் இருக்கும்.
தொடர்ந்து இரு காலாண்டுகளாக மந்தநிலை நீடித்தால் டெக்னிக்கல் ரிசஸன் எனப் பொருளாதாரத்தில் சொல்லப்படும். இந்தியாவில் இதுவரை இதுபோன்ற நிலை வந்ததே கிடையாது. முதல் முறையாக இதுபோன்ற மந்தநிலைச் சூழலை எதிர்கொள்கிறோம்.
இந்தப் பொருளாதார மந்தநிலையைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நாளேட்டின் பொருளாதாரக் கணிப்பு குறித்த செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில் ஜூலை செப்டம்பர் 2-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 8.6 சதவீதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை இணைத்துள்ள ராகுல் காந்தி அந்தப் பதிவில், “வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பொருளாதார மந்தநிலைக்குச் செல்கிறது. பிரதமர் மோடியின் செயல்கள், கொள்கைகளால், இந்தியாவின் வலிமையைப் பலவீனமாக மாற்றிவிட்டார்” என விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT