Published : 12 Nov 2020 12:27 PM
Last Updated : 12 Nov 2020 12:27 PM
மகாராஷ்டிராவில் அதிகாரத்தை மாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசாங்கம் தானாகவே கவிழும் என்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
புதன்கிழமை அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில் பிஹார் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 243 தொகுதி களில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 124 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதில் பாஜக 73, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
பிஹார் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் பாஜக அதிக இடங்களைப் பிடித்துள்ளது குறித்தும் தேர்தலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் பேசியபோது, ''இதன் தாக்கம் தேசிய அரசியலிலும் எதிரொலிக்கும்'' என்றார்.
இதுகுறித்து தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:
''இச்சூழலை மகாராஷ்டிராவில் பொருத்திப் பார்த்தால், அது எங்கள் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகாரத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு தானாகவே கவிழும்.
இந்த வகை அரசாங்கத்தால் நீண்ட காலம் தொடர முடியாது. இந்த அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் வீழ்ச்சியடையும். அதன் பின்னர் நாங்கள் ஒரு மாற்று அரசாங்கத்தை வழங்குவோம்.
ஆனால், இப்போதைக்கு இது எங்கள் முன்னுரிமை அல்ல. மகாராஷ்டிராவில் முன்னோடியில்லாத வகையில் விவசாய நெருக்கடி நிலவுகிறது. இழப்புகளைச் சந்தித்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அவர்களுக்கு அரசு இன்னும் நிதி உதவி வழங்கவில்லை. எதிர்க்கட்சியாக இருப்பதால் நாங்கள் விவசாயிகளுடன் நிற்கிறோம். அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறோம்.
பிஹாரில் ஏற்பட்டுள்ள தேர்தல் வெற்றி தேசிய அரசியலிலும் மேற்கு வங்கத்திலும் எதிரொலிக்கும். மேற்கு வங்கத்தில் காற்று மாறி வீசிக்கொண்டிருப்பதை நாம் காணலாம். தேர்தலுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் பாஜக அரசு அமையும்.
பிஹார் தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஆதரவான தேர்தலாக மாறியது. மக்கள் மோடியை நம்புகிறார்கள். பாஜக கூட்டணிக்கு வாக்களித்தனர். நிதிஷ் குமாரின் நல்ல பிம்பமும் எங்களுக்கு உதவியது''.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT