Published : 25 Oct 2015 03:55 PM
Last Updated : 25 Oct 2015 03:55 PM
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மந்திரவாதி ஒருவரை சந்தித்தது பற்றிய வீடியோ வெளியிடப்பட்டு பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியும் அதைக் குறிப்பிட்டு நிதிஷ் குமார் மீது கேலி வார்த்தைகளை வீசியுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான கிரிராஜ் சிங் சமூக இணையதளங்களில் ஒரு வீடியோ காட்சியை வெளி யிட்டுள்ளார்.
அதில், மந்திரவாதி ஒருவருடன் நிதிஷ் குமார் அமர்ந்துள்ளார். இவர்களுடன் நிதிஷ் கட்சியின் மோகமா தொகுதி வேட்பாளர் நீரஜ் குமாரும் உள்ளார். அப்போது நிதீஷுக்கு ஆதரவாக மந்திரவாதி ஸ்லோகங்களை சொல்கிறார். இருவருக்கிடையிலான உரை யாடல் தெளிவாக கேட்கவில்லை. எனினும், ‘கவலைப்பட வேண்டாம்’ என்று நிதிஷ் குமாரிடம் மந்திரவாதி கூறுவது தெளிவாக கேட்கிறது. மேலும் நிதிஷ் குமாரின் பரம எதிரியாக இருந்து இப்போது அவருடன் கைகோர்த்துள்ள லாலு பிரசாத் யாதவுக்கு எதிராகவும் மந்திரவாதி சில ஸ்லோகங்களைக் கூறுகிறார்.
இந்த வீடியோவைக் குறிப்பிட்டு பிஹார் மாநிலம் மர்ஹவ்ராவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி பேசியதாவது:
கிராண்ட் அலையன்ஸில் 3 கட்சிகள் இருப்பதாகவே நான் அறிவேன். அதாவது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ். இப்போதுதான் கேள்விப்பட்டேன் 4-வதாக ஒருவர் சேர்ந்துள்ளார் என்பதை, ஒரு மந்திரவாதி இணைந்துள்ளார்.
ஜனநாயகம் என்பது மந்திர தந்திரங்களால் நடைபெறுவதல்ல, மக்களை வைத்துத்தான் ஜனநாயகம் நடைபெறுகிறது. ஜனநாயகத்துக்கு இவ்வாறு ஒருவர் தீங்கு செய்ய முடியுமா? இளைஞர்கள் வளர்ச்சிக்காக ஒரு தாந்திரீகர் என்ன செய்ய முடியும்?
இனி லாலு தனது கட்சியை ராஷ்ட்ரிய ஜாது-தோனா தளம் என்றே பெயரிட வேண்டும். மாஹாகாத்பந்தன் (மகா கூட்டணி) எப்போதும் மகாஸ்வார்த்பந்தன் (மகா சுயநலக் கூட்டணி) ஆகவே உள்ளது.
சமீபத்தில் ஒரு கூட்டத்தில் மைக்கில் பழுது ஏற்பட மைக் மெக்கானிக்கை தூக்கி எறிந்து விடுவதாக மிரட்டினீர்கள், உங்களுக்கு அவர் ஒன்றுமில்லாதவர்தான் ஆனால் அவர் எங்கள் சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்.
6 வளர்ச்சித் திட்டங்கள்:
ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சார வசதி, ஒவ்வொரு வீடு மற்றும் விவசாயிகளுக்கு நீராதாரம், அனைவருக்கும் சாலை, குழந்தைகளுக்குக் கல்வி, இளைஞர்களுக்கு வேலை, முதியோர்களுக்கு மருந்து... இதுதான் பிஹாருக்கான எனது திட்டங்கள்.
இம்மாநில இளைஞர்கள், வாழ்வாதாரத்துக்காக சொந்த ஊரை விட்டு வெளியேறி அயல் மாநிலங்களில் குடிசையில் தங்குவது இந்த மாநிலத்தின் சாபக்கேடாக உள்ளது. இந்த மாநிலத்திலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
நிதிஷ் குமார் மீது தாக்கு:
ஏழைக் குழந்தைகள் தங்கள் உயிரை இழக்கும்போது, பிரிவில் வாடும் குடும்பத்தினரை சந்திக்க உங்களுக்கு நேரமில்லை. ஆனால் கால், கையில் கட்டுடன் நீங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
உள்ளாட்சி தேர்தலில் 90% சிறுபான்மையினர் இருந்தும் பாஜக எதிர்பாராத வெற்றியைப் பெற்றது, இது பிஹார் தேர்தலிலும் எதிரொலிக்கும், என்றார் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT