Last Updated : 30 Oct, 2015 08:43 PM

 

Published : 30 Oct 2015 08:43 PM
Last Updated : 30 Oct 2015 08:43 PM

டெல்லி போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம்

டெல்லியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண்ணுக்கு ஆட்டோவில் குழந்தை பிறந்தது. கிழக்கு டெல்லி பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில் தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

டெல்லியில் இந்திய - ஆப்பிரிக்க உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ளும் பல முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கருதி டெல்லியின் பல பகுதிகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், அன்றாடம் அலுவலகப் பணிக்கு தம் வாகனங்களில் சென்று வீடு திரும்பும் ஆயிரக்கணக்கானவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுற்று வருகின்றனர்.

இதில், ஒருவராக கிழக்கு டெல்லி பகுதியின் கஜவுரி சோக் எனும் இடத்தின் அருகே நேற்று தன் மாமியாருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார் ரோஷ்ணி. நிறைமாதக் கர்பிணியான இவர் தம் பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர வேண்டி சென்று கொண்டிருந்தார். இவருக்கு பின்னால் ரோஷ்ணியின் கணவரான சல்மான் தம் பைக்கில் தொடர்ந்தபடி வந்தார். ஆனால், அங்கு போக்குவரத்து நெரிசலில் ஒரே இடத்தில் சுமார் மூன்று மணி நேரமாக ரோஷ்ணி வந்த ஆட்டோ சிக்கியது.

இதன் தொடர்ச்சியாக, திடீர் என பிரசவ வலியால் துடித்த ரோஷ்ணியை மருத்துவமனை கொண்டு செல்வதும் சிக்கலாக இருந்தது. இந்தநிலையில் தாம் பயணம் செய்து வந்த ஆட்டோவிலேயே ரோஷ்ணிக்கு 8.45 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு, அதன் அருகில் இருந்த வார்டு உறுப்பினரான ரேகா ராணி என்பவரின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அலுவலர்கள் உதவியாக இருந்தனர்.

இது குறித்து 'தி இந்து'விடம் பேசிய சல்மான், 'ரோஷ்ணியின் நிலைமை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் அருகில் இருந்த லானி குடியிருப்புகளில் புகுந்து அரசு மருத்துவமனை சேர முற்பட்டார். ஆனால், அந்த வழியாகவும் ஏற்பட்ட நெரிசலால் ஆட்டோவிலேயே பிரசவமாகி விட்டது. இதன் பிறகு சாஸ்திரி பூங்காவின் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு வார்டு உறுப்பினர் ரேகா உதவியுடன் கொண்டு சென்றோம். தற்போது குழந்தை நலமுடன் இருந்தாலும், ரோஷ்ணியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது’ எனத் தெரிவித்தார்.

ஆட்டோவில் முறையான மருத்துவ கவனிப்பு இன்றி குழந்தை பிறந்தமையால் ரோஷ்ணிக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டிருப்பதாகவும், இதை நிறுத்த ஐம்பது தையல்களுடன் அறுவை சிகிச்சை செய்யப்படிருப்பதால் ரோஷ்ணியின் உடல்நிலை இன்னும் ஆபத்தை தாண்டவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டின் தலைநகரான டெல்லியில் அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அம் மாநில காவல்துறை சார்பில் முதன்முறையாக ஹெலிகாப்டர் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இதை கடந்த வாரம் முடிந்த தசராவின் இறுதி நாள் மற்றும் மொகரம் ஊர்வலங்களின் போது சோதனை அடிப்படையில் பயன்படுத்தி வெற்றி கண்டது.

இதையைடுத்து கடந்த திங்கள்கிழமை துவங்கிய உச்சி மாநாட்டிலும் இரண்டு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி போக்குவரத்தை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ரூபாய் நான்கு லட்சம் வாடகையில் எடுக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர்களுடன் மத்திய பாதுகாப்பு படைகளின் சுமார் 25,000 போலீஸாரும் பணியில் உள்ளனர். 500 சிசிடிவி கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x