Published : 10 Nov 2020 05:21 PM
Last Updated : 10 Nov 2020 05:21 PM
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வலுவானவை, மிகச்சரியானவை. நம்பத்தகுந்தவை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை சொல்வதை நிறுத்த வேண்டிய நேரம் இது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடனும், மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த கமல்நாத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சியிலிருந்து பிரிந்த மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, அதன்பின் பாஜகவில் இணைந்தார்.
ஜோதிராதித்யாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். அந்த வகையில் 25 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதால், கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக தலைமையில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக 28 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ஆட்சியைத் தக்கவைக்க 8 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது.
அதாவது, 229 எம்எல்ஏக்கள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் 107 எம்எல்ஏக்களுடன் பாஜக ஆட்சியில் இருக்கிறது. பெரும்பான்மைக்கு இன்னும் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு முதல்வர் சவுகானுக்குத் தேவை.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியில் அமர 28 எம்எல்ஏக்கள் ஆதரவும், குறைந்தபட்சம் ஆட்சியமைக்கக் கோர 21 எம்எல்ஏக்கள் ஆதவும் தேவைப்பட்டது.
ஆனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியதிலிருந்து பாஜகவே தொடர்ந்து பெரும்பாலான இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி பாஜக 20 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுயேச்சை ஓரிடத்தில் முன்னிலையில் உள்ளது.
ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாக ம.பி. முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில் ‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மோசடி செய்ய முடியாதவை என்பது இன்னமும் நிருபிக்கப்படவில்லை. இந்த தேர்தலில் குறிப்பிட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்களில் மட்டும் மோசடி செய்துள்ளனர்.
எந்த சூழலிலும் காங்கிரஸுக்கு தோல்வியே ஏற்படாத தொகுதிகள் உள்ளன. ஆனால் அந்த தொகுதிகளில் கூட நாங்கள் சில ஆயிரம் வாக்குகள் தான் வாங்கியுள்ளோம்.
இந்த குறிப்பிட்ட தொகுதிகளில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. இதுபற்றி நாளை கூடி விவாதிக்க உள்ளோம். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம்.’’ எனக் கூறினார்.
இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘எந்த தேர்தலில் முடிவுகள் வெளியானாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை சொல்வதை நிறுத்த வேண்டிய நேரம் இது. எனது அனுபவத்தை பொறுத்தவரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வலுவானவை. மிகச்சரியானவை. நம்பத்தகுந்தவை.
EVM system is robust, accurate & dependable. This has always been my view. I stand by it. There have been doubters of the EVM from across political political parties, particularly when the results don't go in their favour. Till now no has demonstrated scientifically their claims. https://t.co/e1dG8WsgOp
— Karti P Chidambaram (@KartiPC) November 10, 2020
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வலுவானவை, மிகச்சரியானவை. நம்பத்தகுந்தவை, இது தான் எப்போதுமே எனது கருத்து. இதில் நான் உறுதியாக இருக்கிறேன். அனைத்து கட்சிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சந்தேகப்படக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.
குறிப்பாக முடிவுகள் தங்களுக்கு எதிராக வந்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் கூறுகிறார்கள். ஆனால் இதுவரை சந்தேகம் தெரிவிப்பவர்கள் அறிவியல் பூர்வமாக தங்கள் வாதத்தை நிருபிக்கவில்லை.’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT