Published : 10 Nov 2020 05:17 PM
Last Updated : 10 Nov 2020 05:17 PM
2018ஆம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மும்பை உயர் நீதிமன்றத்தில் அர்னாப் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, இடைக்கால ஜாமீன் கோரி அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மகாராஷ்டிர அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் அர்னாப் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறுங்கள் எனத் தெரிவித்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தை அர்னாப் அணுகியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளர் ஒருவர் செய்த பணிகளுக்குப் பணம் தராமல் ரிபப்ளிக் சேனல் இழுத்தடித்ததால் அவர் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில் பாஜக ஆட்சி மாநிலத்தில் நடந்ததால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், சமீபத்தில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த வழக்கின் விசாரணையில் உள்ளரங்கு வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் போலீஸார் கடந்த வாரம் புதன்கிழமை கைது செய்தனர்.
தற்போது அர்னாப் கோஸ்வாமி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் அர்னாப் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகக் கோரி மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி, கைதான மற்ற இருவரான பெரோஷ் ஷேக், நிதிஷ் ஷர்தா தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் ஆகியோர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை நிராகரித்து விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு கூறினர்.
இதையடுத்து அலிபாக் செசன்ஸ் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.
இந்தச் சூழலில் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமியின் வழக்கறிஞர் நிர்னிமேஷ் துபே மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், மும்பை போலீஸ் ஆணையர் பரம் பிர் சிங், அக்ஸயத்தா அன்வே நாயக், அலிகாப் காவல்நிலைய ஆய்வாளர் ஆகியோரிடமும் விசாரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதற்கிடையே மகாராஷ்டிர அரசு சார்பில் வழக்கறிஞர் சச்சின் பாட்டீல் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், அர்னாப் கோஸ்வாமியின் மனு மீது தங்களின் கருத்தைக் கேட்காமல் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT