Published : 10 Nov 2020 02:05 PM
Last Updated : 10 Nov 2020 02:05 PM
குஜராத்தில் 8 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்கள். இதனால் பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகத்தில் கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லாமல் 8 இடங்களிலும் தோல்வியை நோக்கி நகர்கிறது.
குஜராத்தில் காலியாக இருந்த, லிம்டி, அப்டாசா, கப்ராடா, டாங், கர்ஜான், தாரி, கதாடா, மோர்பி ஆகிய 8 தொகுதிகளுக்கும் கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. 8 தொகுதகளில் 81 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலியான 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏக்கள் இருந்தனர். அவர்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததையடுத்து இடைத்தேர்தல் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் லிம்டி, அப்டாசா, கப்ரடா, டாங், கர்ஜான் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இடையே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர்.
ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் எண்ணப்பட்டபோது, காங்கிரஸ் வேட்பாளர்களை பாஜக வேட்பாளர்கள் முந்திச் சென்று 8 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றனர். இதனால் பாஜக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர். காந்தி நகரில் பாஜக தொண்டர்கள் ஆட்டம் ஆடியும், பட்டாசுகளை வெடித்தும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
காங்கிரஸ் சார்பில் மோர்பி தொகுதியில் போட்டியிட்ட ஜெயந்திலால் பாட்டீல் 46,397 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரிஜேஷ் மேர்ஜா 47,893 வாக்குகள் அதாவது கூடுதலாக ஆயிரம் வாக்குகள் முன்னிலையுடன் உள்ளார்.
மற்ற 7 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னிலையுடன் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகின்றனர். லிம்டி தொகுதியில் பாஜக முன்னாள் அமைச்சர் கிரித்திசின் ராணா 22 ஆயிரம் வாக்குகள் முன்னிலையுடன் உள்ளார். அப்டாசா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரதுமன்சின் ஜடேஜா 16 ஆயிரம் வாக்குகள் முன்னிலையுடன் உள்ளார்.
கப்ராடா தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜிது சவுத்ரி, டாங் தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜய் படேல் ஆகிய இருவரும் காங்கிரஸ் வேட்பாளர்களைவிட 14 ஆயிரம் வாக்குகள் முன்னிலையுடன் உள்ளனர்.
கர்ஜான் தொகுதியில் பாஜக வேட்பாளர் அக்சய் படேல் 9,900 வாக்குகள் முன்னிலையுடன் உள்ளார். தாரி தொகுதியில் பாஜக வேட்பாளர் ககாதியா 5,500 வாக்குகள் முன்னிலையிலும், கதாடா தொகுதியில் பாஜக வேட்பாளர் அத்மாராம் பார்மர் 9,500 வாக்குகள் முன்னிலையிலும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT