Last Updated : 10 Nov, 2020 11:16 AM

1  

Published : 10 Nov 2020 11:16 AM
Last Updated : 10 Nov 2020 11:16 AM

பிஹார் தேர்தல்; சரத் யாதவ் மகள் சுபாஷினி பின்னடைவு: தேஜஸ்வி யாதவ் முன்னிலை

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்: கோப்புப் படம்.

பாட்னா


பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சரத் யாதவின் மகள் சுபாஷினி சரத் யாதவ் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் நிரஞ்சன் குமார் மேத்தா முன்னிலை வகித்துள்ளார்.

பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 3,733க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது.

தொடக்கத்தில் மகா கூட்டணி முன்னிலை வகித்த நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கடும் போட்டியளித்து, முன்னிலைக்கு வந்தது. பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்கள் எந்தக் கூட்டணிக்கும் கிடைக்காமல் இரு கூட்டணியும் கடும் போட்டியில் செல்கின்றன.

சுபாஷினி சரத் யாதவ்.

இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஹசன்பூர் தொகுதியில் போட்டியிட்ட தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவைச் சந்தித்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ்குமார் ராய் 5,621 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இமாம்காஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி 3,815 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர் சரத் யாதவின் மகள் சுபாஷினி சரத் யாதவ் காங்கிரஸ் கட்சி சார்பில் பிஹாரிகஞ்ச் தொகுதியில் போட்டியிட்டார். தொடக்கத்தில் முன்னிலை வகித்த சுபாஷினி அதன்பின் பின்தங்கினார்.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, காங்கிரஸ் வேட்பாளர் சுபாஷினி சரத் யாதவ் 2,791 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜேடியு வேட்பாளர் நிரஞ்சன் குமார்மேத்தா 4,062 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் 2,445 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஸ் குமார் 1990 வாக்குகள் மட்டுமே பெற்று பின்தங்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x