Last Updated : 10 Nov, 2020 03:11 AM

 

Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM

பிஹார் பேரவைத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற தேஜஸ்வி: பின்னணியில் உதவியாளர் மணி யாதவ்

தேஜஸ்வியுடன் மணி யாதவ்

புதுடெல்லி

பிஹார் தேர்தலில் மெகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளார். இதன் பின்னணியில் அவரின் உதவியாளரான இளம் வயது நண்பர் மணி யாதவ் இருப்பது தெரியவந்துள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி. இவரிடம் மணி யாதவ் மற்றும் சஞ்சய் யாதவ் என 2 உதவியாளர்கள் உள்ளனர். இவர்களில் தேஜஸ்வியின் இளமைக்காலம் முதல் நண்பராக இருக்கும் மணி யாதவ், மிகவும்நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவற்றைக் குறிப்பிட்டு மணி யாதவ் மீது ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் (ஜேடியு) தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இவர்மீது பாட்னாவின் காந்தி மைதானம் காவல் நிலையத்தில் கடந்த 2011-ல் ஒரு வழக்கு பதிவாகி மணி யாதவ் சிறையிலும் அடைக்கப்பட்டதாக ஜேடியுவினர் புகார் கூறுகின்றனர்.

கடந்த வருடம் பிஹாரின்முசாபர்பூரின் பெண் குழந்தைகள் காப்பகத்தில் நிகழ்ந்த பாலியல் புகாரிலும் மணி யாதவுக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் கூறினர். இவை அனைத்துக்கும் தேஜஸ்வி தரப்பு அது மணி யாதவ் மீதான அரசியல் சதி எனப் பதிலளிக்கிறது.

தேஜஸ்வியின் தாயும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியின் உறவினரான மணி யாதவுக்கு 2 சகோதரர்களும் உள்ளனர். இவர்களில் ஒருவரான நாகமணி, ராப்ரிக்கு உதவியாளராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மற்றொரு சகோதரரான ஓம் பிரகாஷ் யாதவ், லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவுடன் சிறிது காலம் உதவியாளராக இருந்துள்ளார்.

அப்போது, மணமான சிலமாதங்களில் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்தார் தேஜ் பிரதாப். இதன் பின்னணியில் ஓம் பிரகாஷ் யாதவ் இருப்பதாக அவர் மீது லாலு குடும்பத்தினர் மிகவும் கோபமாக இருந்தனர். இதனால், தேஜ் பிரதாப்பிடம் இருந்து ஓம்பிரகாஷ் யாதவ் விலக்கி வைக்கப்பட்டார். இருப்பினும், மணியாதவின் நெருக்கம் தேஜஸ்வியுடன் அதிகமானது.

பிஹாரின் சட்டப்பேரவை தேர்தலிலும் தேஜஸ்விக்கு ஆலோசனை அளித்து வந்துள்ளார் மணியாதவ். தேஜஸ்வி ஒவ்வொருமேடையிலும் அவரது பின்புறம் அமர்வதை மணி யாதவ் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கு மணி மீது தேஜஸ்வி வைத்துள்ள அதீத நம்பிக்கை காரணமாக உள்ளது. இதனால், காலையில் உடற்பயிற்சி செய்வது முதல் கட்சி அலுவலகம் வரை தேஜஸ்வியுடன் மணி யாதவ் இருக்கிறார்.

பிஹார் தேர்தலில் வென்று தேஜஸ்வி முதல்வரானால், மணி யாதவின் செல்வாக்கு ஆட்சி நிர்வாகத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x