Last Updated : 09 Nov, 2020 08:05 PM

58  

Published : 09 Nov 2020 08:05 PM
Last Updated : 09 Nov 2020 08:05 PM

மோடி அரசு வேண்டுமென்றே கொண்டுவந்த லாக்டவுன், பண மதிப்பிழப்பால் கணக்கிடமுடியாத குடும்பங்கள் அழிந்துவிட்டன: ராகுல் காந்தி சாடல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: கோப்புப் படம்.

புதுடெல்லி

மோடி தலைமையிலான அரசு உள்நோக்கத்தோடு, வேண்டுமென்றே கொண்டுவந்த ஊரடங்கு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் கணக்கிடமுடியாத குடும்பங்கள் அழிந்துவிட்டன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 4-வது ஆண்டு நிறைவு நாளான நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாகச் சாடியிருந்தார். கரோனா வைரஸைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பொருளாதாரம் நலிந்து, வங்கதேசத்தைவிடச் சரிந்துவிட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி இன்று ட்விட்டரில், தெலங்கானாவில் 19 வயது மாணவி லாக்டவுன் காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட பண நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்த செய்தி

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் படித்துக்கொண்டே, ஐஏஎஸ் ஆகும் கனவுடன் தயாராகி வந்தார். அந்த மாணவியின் தந்தை சாதாரண மெக்கானிக். கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு கொண்டுவந்த லாக்டவுன் நடவடிக்கையால் மெக்கானிக் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அவரது குடும்பம் வறுமைக்குச் சென்றது.

தனது படிப்புக்காக பழைய லேப்டாப் வாங்கக் கூட முடியாமல் அந்த மாணவி மிகுந்த சிரமப்பட்டுள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட பண நெருக்கடி, தந்தையின் சூழல், வறுமை ஆகியவற்றால் மனமுடைந்து கடந்த 2-ம் தேதி அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

12-ம் வகுப்பில் 98.5 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவி தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக எழுதிய கடிதத்தில், லாக்டவுனில் தனது குடும்பத்தினர் அனுபவித்த சிரமங்களைக் கூறியும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சிக்கலில் படிக்க விருப்பமில்லை எனக் கூறியும் தற்கொலை முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.

ஆங்கில நாளேட்டில் வந்த இந்தச் செய்தியை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “இந்தத் துக்கமான தருணத்தில் மகளை இழந்து வாடும் அந்தக் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன். வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு பாஜக அரசாங்கம் கொண்டுவந்த பண மதிப்பிழப்பு, நாடு முழுவதும் ஊரடங்கு நடவடிக்கையால் கணக்கிடமுடியாத குடும்பங்களை அழித்துவிட்டது. இதுதான் உண்மை” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x