Published : 09 Nov 2020 07:04 PM
Last Updated : 09 Nov 2020 07:04 PM
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட அதே முடிவு, பாஜகவுக்கும் ஏற்படும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்தார்.
ஜம்மு பகுதிக்கு 5 நாட்கள் பயணமாக மெகபூபா முப்தி சென்றிருந்தார். அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று புறப்படுகையில், மெகபூபா முப்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியாதாவது:
''பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாகட்பந்தன் கூட்டணி வெற்றி பெறும் எனத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வந்துள்ளதை வரவேற்கிறேன். தேஜஸ்வி யாதவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன். அவரின் தேர்தல் வாக்குறுதியான ரொட்டி, ஆடை, வீடு எனும் வார்த்தைகளை வரவேற்கிறேன்.
ஆனால், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்து, நாடு முழுவதும் மக்களைக் காஷ்மீருக்குள் அனுமதித்து மத்திய அரசு செய்த செயலால் எதுவும் நடக்கவில்லை. மக்கள் தங்களுக்கான உணவு குறித்துதான் அக்கறையாக இருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு 2 வேளை உணவுகளை பாஜகவால் வழங்க முடியவில்லை. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என வாக்குறுதி அளிக்கிறது. வகுப்புவாத, வெறுப்பு அரசியல் மூலம் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை பாஜக திசை திருப்புகிறது.
இன்று பாஜகவின் காலமாக இருக்கலாம். ஆனால், நாளை எங்களுக்கான நேரம், காலம் வரும். அமெரிக்காவில் கடந்த வாரம் ட்ரம்ப்புக்கு என்ன நடந்ததோ அதேபோன்ற தேர்தல் முடிவு பாஜவுக்கும் ஏற்படும்.
நாட்டிலேயே மிகவும் ஊழல் மலிந்த கட்சி பாஜகதான். அதிகாரத்திலிருந்து செல்லும் முன்பே, தேசத்தின் அனைத்து வளங்களையும் விற்றுவிட முயல்கிறார்கள். எங்களை ஊழல்வாதிகள் என்று பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களின் கடந்த கால சாதனையைப் பார்த்தால், அனைவரையும் பாஜக மிஞ்சிவிடும். எந்தவிதமான ஆதாரமும் இல்லாதவர்களுக்கு, இன்று மிகப்பெரிய கட்சி அலுவலகம் இருக்கிறது. இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது, கட்சியின் பெயரில் எவ்வாறு இவ்வளவு பணம் வந்தது?
நாங்கள் ஜம்மு காஷ்மீரின் மைந்தர்கள். இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் தேசியக்கொடியை உயர்த்திப் பிடிக்கும் முயற்சியில் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். ஆனால், அரைக்கால் சட்டை அணிந்து செல்லும் சிலரின் தலைவர்கள் தேசியக்கொடியை அவர்களின் அலுவலகத்தில் பறக்கவிட்டதில்லை. ஆனால், அவர்கள் தேசியக்கொடி குறித்துப் பாடம் நடத்துகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை ஜம்மு காஷ்மீர் கொடியும், தேசியக்கொடியும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதான். இரு கொடிகளையும் ஒன்றாகத்தான் உயர்த்திப் பிடிப்பேன்''.
இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT