Last Updated : 09 Nov, 2020 01:23 PM

 

Published : 09 Nov 2020 01:23 PM
Last Updated : 09 Nov 2020 01:23 PM

லைஃப் மிஷன் திட்டத்தில் விசாரணை: அமலாக்கப் பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பிய கேரள சட்டப்பேரவை.

கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் லைஃப் மிஷன் திட்டத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவுக்குச் சட்டப்பேரவை உரிமை மற்றும் நெறிகள் குழு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.

கேரள அரசு சார்பில் ஏழை மக்களுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுக்கும் வகையில் லைஃப் மிஷன் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, கடந்த ஜூலை 20-ம் தேதி எம்எல்ஏ அனில் அகாரா அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே கேரளா அரசியலை உலுக்கி எடுத்துவரும் தங்கக் கடத்தல் வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து விசாரித்துவரும் அமலாக்கப் பிரிவினர், லைஃப் மிஷன் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும் விசாரிக்கத் தொடங்கினர்.

சமீபத்தில், கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் நடத்திய விசாரணையில் லைஃப் மிஷன் திட்டம் உள்ளிட்ட சில அரசுத் திட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்துச் சில தகவல்களைப் பகிர்ந்தார் எனத் தெரிவித்தனர்.

கேரள சட்டப்பேரவை : கோப்புப்படம்

இந்நிலையில் மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ஜேம்ஸ் மாத்யூ, சட்டப்பேரவை விதிகள் 159-ன் கீழ், சட்டப்பேரவை உரிமை மற்றும் நெறிமுறைகள் குழுவில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், “லைஃப் மிஷன் திட்டம் என்பது கேரள அரசின் கொள்கைத் திட்டம். இது ஆளுநரின் உரையில் இடம் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விடாமல் நிறுத்தியுள்ள அமலாக்கப் பிரிவைச் சட்டப்படி கேள்விகள் கேட்டு விளக்கம் கேட்க உரிமை உண்டு” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவை உரிமை மற்றும் நெறிமுறைகள் குழுவின் தலைவர் ஏ. பிரதீப் குமார் அமலாக்கப் பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளார்.

இதுகுறித்து ஏ.பிரதீப் குமார் நிருபர்களிடம் கூறுகையில், “சட்டப்பேரவை விதி 159-ன் கீழ் எம்எல்ஏ ஜேம்ஸ் மேத்யூ புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் லைஃப் மிஷன் திட்டத்தை விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளோம். வழக்கமாக, உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பினால் 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

எம்எல்ஏ ஜேம்ஸ் மேத்யூ கூறுகையில், “லைஃப் மிஷன் திட்டம் என்பது அரசின் கொள்கைத் திட்டம். இந்தத் திட்டத்தில் அமலாக்கப் பிரிவு அனைத்துவிதமான ஆவணங்களையும் கேட்பது என்பது சட்டப்பேரவை உரிமைகளை மீறும் செயலாகும். இந்தத் திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்று அரசு சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளது.

திருச்சூர் வடக்கன்சேரி லைஃப் மிஷன் திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்றால் அதை மட்டும் விசாரிக்கலாம். ஆனால், அதற்காக அனைத்து ஆவணங்களையும் கேட்டு, மாநிலத்தில் நடக்கும் திட்டத்தை நிறுத்த முயலும் அமலாக்கப் பிரிவு முயற்சியை அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x