Published : 08 Nov 2020 08:00 AM
Last Updated : 08 Nov 2020 08:00 AM
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 46-வது அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரும் துணை அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸுக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. அதிபர் தேர்தலில் தொடக்கத்திலிருந்தே ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வந்தார். வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில் 266 இடங்கள் பெற்று முன்னிலையில் இருந்தநிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் 20 பிரதிநிதிகள் வாக்குகளும் ஜோ பைடனுக்குக் கிடைத்ததால் வெற்றி உறுதியானது.
இதையடுத்து, 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் அறிவித்தன. அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்றார்.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். உலக நாடுகளின் தலைவர்கள் ஜோ பைடன், ஹாரிஸுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்த செய்தியில், ''அறிவார்ந்த மற்றும் முதிர்ந்த தலைவர்களான ஜோ பைடன், கமலா ஹாரிஸ் தலைமையில் அமெரிக்காவுடன் இந்தியாவுக்கான நட்புறவு மேலும் வலிமையடைய வேண்டும் என எதிர்நோக்குகிறேன். நம்முடைய பிராந்தியத்துக்கும், உலகம் முழுமைக்கும் அமைதியும், வளர்ச்சியும் கிடைப்பதாக இந்தத் தேர்தல் வெற்றி அமையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ட்விட்டரில் விடுத்த வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். அமெரிக்காவை ஒற்றுமைப்படுத்தி, சரியான பாதையில் கொண்டு செல்வார் என்று நம்புகிறேன்.
துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகள். இந்தியாவை வேராகக் கொண்டவர். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT