Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் நாளை இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், கடந்த 2009-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதல் மாணவராகவும், இந்திய அளவில் 9-வது மாணவராகவும் வெற்றி பெற்றார். கர்நாடக கேடர் அதிகாரியான இவர், 2009 முதல் 2012-ம் ஆண்டு வரை பெல்லாரி மாவட்டத்தின் துணை ஆட்சியராக பணியாற்றினார். அப்போது சிறப்பாக பணியாற்றியதால், 2013-ம் ஆண்டு சித்ரதுர்கா மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர், ரெய்ச்சூர்,ஷிமோகா ஆகிய மாவட்டங்களிலும் சசிகாந்த் செந்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். அங்கு அவர் நேர்மையாகவும் துணிச்சலாகவும் பணியாற்றியதால் மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைத்தது. இதனிடையே, சசிகாந்த் செந்திலை பணியிட மாற்றம் செய்ய அரசாங்கம் முயற்சித்தபோது, அதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியது வியப்பை ஏற்படுத்தியது.
2017-ம் ஆண்டு தட்சின கன்னட மாவட்டத்தில் இரு பிரிவினர் தொடர்ந்து மோதிக் கொண்டே இருந்ததால் அடிக்கடி மதக் கலவரம் ஏற்பட்டது. அதைத் தடுப்பதற்காக சசிகாந்த் செந்திலை அங்கு மாவட்ட ஆட்சியராக முதல்வர் சித்தராமையா நியமித்தார். இதையடுத்து, அவர் கிராமங்கள், கல்வி நிலையங்கள் தோறும் சமூக நல்லிணக்கக் கூட்டம் நடத்தி மத ரீதியான மோதலை தடுத்தார்.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி சசிகாந்த் செந்தில் மாவட்ட ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் கூறும்போது, "நான் அரசியல்வாதிகளின் அழுத்தத்தினால் இந்தப் பதவியில் இருந்து விலகவில்லை. அண்மைக்காலமாக மத்திய அரசு முன்னெடுத்து வரும் கருத்தியலை பிடிக்காமலேயே என் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். நாட்டில் நடக்கும் சில சம்பவங்களை என்னால் சகிக்க முடியவில்லை" என்றார்.
அதன் பிறகு, மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை சசிகாந்த் செந்தில் கடுமையாக எதிர்த்தார். இதற்கு எதிராக நடந்த போராட்டங்களில் பங்கேற்று மத்திய அரசை விமர்சித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சசிகாந்த் செந்தில் காங்கிரஸில் இணைய முடிவெடுத்துள்ளார். டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல் முன்னிலையில்அக்கட்சியில் இணைய இருக்கிறார் என மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணி யாற்றிய அண்ணாமலை சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT