Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM

உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் எதிர்பாராத விளைவை சீனா சந்திக்கிறது: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தகவல்

பிபின் ராவத்

புதுடெல்லி

‘‘உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) சீனா அடிக்கடி எல்லை மீறி வருவதால், இந்திய ராணுவத்திடம் இருந்து எதிர்பாராத விளைவுகளை சந்தித்து வருகிறது’’ என்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார்.

இந்தியா - சீனா இடையே எல்லை தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்து கூடாரங்களை அமைத்தது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் இரு தரப்பு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத் துருப்புகள் குவிக்கப்பட்டன. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்ற நிலையைத் தணிக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் டெல்லி தேசிய பாதுகாப்பு கல்லூரி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பிபின் ராவத் பேசியதாவது:

கிழக்கு லடாக்கின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இன்னும் நிலைமை பதற்றமாகவே உள்ளது. கிழக்கு லடாக்கின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை மற்றும் பதிலடியால் சீன ராணுவம் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது.

சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து தற்போதும் நமக்கு அச்சுறுத்தல் உள்ளது. பிராந்திய அளவில் உறுதியற்ற தன்மை நிலவும் போது அவர்கள் இணைந்து செயல்படுவது ஆபத்தானது. எல்லை மோதல்கள், வரம்பு மீறல்கள், நேரடியாக மோதாமல் எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் போன்றவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

பாகிஸ்தானுக்கு மறைமுகமாக தற்போது சீனா உதவி வருகிறது. இந்நிலையில், சீனாவை ஒட்டியுள்ள இந்திய எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலைத் திட்டத்துக்கும் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இனிமேலும் இந்தியாவுக்கு தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் பாகிஸ்தானின் திட்டம் பலிக்காது.

காஷ்மீர்தான் தங்களது இலக்கு என்று பாகிஸ்தான் இனி செயல்பட முடியாது. உள்நாட்டுப் பிரச்சினைகள், மோசமான பொருளாதாரம், சர்வதேச நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது, நாட்டு மக்கள் - ராணுவத்துடனான உறவு போன்ற பிரச்சினைகளால் பாகிஸ்தான் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது.

இவ்வாறு பிபின் ராவத் பேசினார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x