Published : 06 Nov 2020 06:40 PM
Last Updated : 06 Nov 2020 06:40 PM
ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை உரிமை மீறல் வழக்கில் கைது செய்யக்கூடாது. மகாராஷ்டிர சட்டப்பேரவை அனுப்பிய கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் காண்பித்தமைக்கு எச்சரித்துக் கடிதம் அனுப்பிய பேரவைச் செயலாளர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைச் செயலாளர் அடுத்த 2 வாரங்களுக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்குத் தொடர்பாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசிய கருத்துகள் குறித்து அர்னாப் கோஸ்வாமி கூறியதால், அவருக்குச் சட்டப்பேரவை உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “சட்டப்பேரவையின் எந்தவிதமான நடவடிக்கையிலும் குறுக்கிடவில்லை. பேரவைக் குழுக்களின் செயல்பாடுகளை விமர்சிக்காத நிலையில் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் மகாராஷ்டிர சட்டப்பேரவைச் செயலாளர் விளக்கம் அளிக்கக் கோரி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், அதேசமயம், சட்டப்பேரவை விவரங்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட வேண்டியது. அதை எவ்வாறு நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றீர்கள் எனக் கேட்டு சட்டப்பேரவைச் செயலாளர், அர்னாப் கோஸ்வாமிக்குக் கடந்த மாதம் 13 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதம் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள், ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அர்னாப் கோஸ்வாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே ஆஜரானார். மகாராஷ்டிர அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷே சிங்வி ஆஜரானார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைச் செயலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எழுதிய கடிதம் குறித்து அறிந்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அதிர்ச்சியும், கோபமும் அடைந்தார்.
நீதிபதிகள் கூறுகையில், “சட்டப்பேரவை விவகாரங்கள் எல்லாம் ரகசியமாக வைக்கப்பட வேண்டியவை. அதை வெளியிடக்கூடாது என்று சட்டப்பேரவைச் செயலாளர் எழுதிய கடிதம் அதிர்ச்சியாக இருக்கிறது. கோபம் வருகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரும் அளவுக்கு மிகவும் தீவிரமான விவகாரம். பேரவைச் செயலாளர் கூறிய கருத்துகள் இதற்கு முன்பு கேட்டிராதவை. நீதிமன்றத்தின் நிர்வாகத்தில் தலையிடும் போக்கு உடையதாகவும், அவமதிக்கும் விதத்திலும் இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்தக் கடிதத்தை எழுதிய பேரவைச் செயலாளரின் நோக்கம், மனுதாரரை மிரட்டும் விதத்தில் இருக்கிறது. ஏனென்றால், அவர் நீதிமன்றத்தை நாடிவிட்டதால், அவர் கடிதம் எழுதி, அபராதம் விதிப்பேன் எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் ஏன் உங்கள் மீது அரசியலமைப்புச் சட்டம் 129இன் கீழ் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரக்கூடாது என்று கேட்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைச் செயலாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். 2 வாரங்களுக்குள் பேரவைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி 32-வது பிரிவின்படி, ஒரு தனி மனிதர் நீதிமன்றத்தை நீதிக்காக நாடுவது அடிப்படை உரிமை என்பதைப் பேரவைச் செயலாளர் நன்கு அறிந்தவர்தானே. அவ்வாறு ஒரு குடிமகன் தனது அடிப்படை உரிமைக்காக நீதிமன்றத்தை நாடும்போது அவரை மிரட்டுவது என்பது நீதிமன்றத்தின் நிர்வாகத்தில் தலையிடும் செயல். உரிமை மீறல் வழக்கில் அர்னாப் கோஸ்வாமியைக் கைது செய்யக்கூடாது” என உத்தரவிட்டனர்.
மகாராஷ்டிர அரசுத் தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, பேரவைச் செயலாளர் எழுதிய கடிதத்துக்குப் பதில் அளிக்க முடியாமல், நியாயம் கற்பிக்க முடியாமல் மவுனமானார். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் என்பவரைத் தலைமை நீதிபதி அமர்வு நியமித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT