Published : 06 Nov 2020 04:05 PM
Last Updated : 06 Nov 2020 04:05 PM
கர்நாடக மாநிலத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறைப்படியான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று தெரிவித்தார்.
ஏற்கெனவே மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஹரியாணா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கவும், விற்கவும் தடை செய்துள்ள நிலையில், தற்போது அந்தப்பட்டியலில் கர்நாடக மாநிலமும் இணைந்துள்ளது.
கர்நாடாக அரசின் கரோனா வைரஸுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை கர்நாடக அரசு கேட்டிருந்தது. அந்த குழு அளித்த பரிந்துரையின்படி, “ கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர், தனிமைப்படுத்தப்பட்டு இருப்போருக்கு நுரையீரல் பகுதி பலவீனமாக இருக்கும். அந்த நேரத்தில் பட்டாசுகள் வெடித்து காற்றுமாறு ஏற்படும்போது, அவர்களின் நிலை மிகவும் மோசமாகும்
அவர்களால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். ஆதலால், பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்யலாம், விற்பனை செய்வதையும் தடை செய்து கண்காணிக்கலாம். ஏனென்றால், பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்வது சாத்தியமில்லை. பட்டாசுகள் வெடிக்கும்போது மக்கள் சமூக விலகலைப் பின்பற்றமாட்டார்கள். ஆனால் விற்பனை செய்வதை தடை செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ கர்நாடக மாநிலத்தில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் அதிகாரபூர்வமான உத்தரவு வெளியிடப்படும். அதில் அனைத்து விவரங்களும் இடம்பெறும்” எனத் தெரிவித்தார்.
ஆனால், கர்நாடக மாநிலத்தில் பட்டாசுகள் வெடிக்க மட்டும்தான் தடையா, அல்லது விற்பனை செய்யவும் தடையா என்பது குறித்து தெளிவாக முதல்வர் எடியூரப்பா தெரிவிக்கவில்லை.
சமீபத்தில் கர்நாடக மாநிலத சுகாதாரத்துறை அமைச்சர் கே. சுதாகர் அளித்த பேட்டியில், “ கரோனா நோயாளிகள் நலன் கருதியும், பட்டாசுகள் விற்பனை, பட்டாசுகள் வெடிக்கவும் தடை கொண்டுவருவது குறித்து அரசுபரிசீலித்து வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT